20/05/2016

2016 இல் மீண்டும் ஜெயலலிதா , காம்ரேட்களின் கவனக்குறைவு,,,

2011 இல் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த ஜெயா
தலைமையிலான அதிமுக அரசு நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் 2016 மூலம் 134
இடங்களை பெற்று மீண்டும் ஐந்து ஆண்டுகளை தக்கவைத்துக்கொண்டது . இதில்
தனிப்பெரும் எதிர்கட்சியாக திமுக அங்கம் வகிக்கிறது. திமுகவானது 88
இடங்களை பெற்றிருக்கிறது. இதன் மூலம் மாற்று என்பது எனக்கு நானேதான்
என்று காட்டியிருக்கிறது ஜெயா அரசு. அவரின் தேர்தல் பிரச்சாரத்திலேயே
இதனை கூறியிருக்கிறார். அந்த வகையில் வரப்போகிற ஐந்து ஆண்டுகளிலும்
தாங்கள் அடிமையாகவே இருக்க விரும்புகிறோம் என்று தங்களின் ஆட்காட்டி
விரலை அடகு வைத்திருக்கும் தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த நன்றிகள்! இங்கே
மக்களின் மனநிலையை புரிந்துணர்வு கொள்ளாமல் அவர்களின் மீதே குறைகூறும்
போக்கு அரசியலுக்கு நல்லதல்ல என்பதை உணர வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
எந்தவிதமான அதிருப்தியையும் ஒரு செயற்கையான திருப்தி மனங்களை
மாற்றக்கூடியதாக இருக்கிறது. இன்னமும் இடதுசாரியமும் இன்னபிற முற்போக்கு
அரசியல் கட்சிகளும் வெகுசன மக்களையும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை
மக்களையும் நெருங்கிச் சென்று அந்த செயற்கையான திருப்தியை உடைக்கும்
சக்தியாக உருபெற்றிடவில்லை என்பதே இத்தேர்தல் எடுத்துரைக்கிறது.
மக்களுக்கும் இடதுசாரியத்திற்கும் இருக்கும் நீண்ட இடைவெளியை
போக்குவதற்கு அவர்களுக்குண்டான ஒரேவழி மக்கள் தொடர்பை வலுப்பெறச்
செய்தலேயாகும். கம்யூனிஸ்ட்டுகள், திராவிட இயக்கங்கள் மற்றும் ,தலித்
இயக்கங்கள் மீது மக்களுக்கு ஒரு அபிப்ராயமும் மரியாதையும் கூடுதலான
நம்பிக்கையும் இருப்பது உண்மை. ஆனால் அது ஏன் தேர்தலின் போது ஓட்டு
வங்கியாக மாறவில்லை என்பதை கண்டறிந்து அதற்கான தேவைகளையும்
பூர்த்திசெய்தால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக எனும் ஏகாதிபத்திய
முதலாளித்துவ ஜெயா அரசை வீழ்த்த முடியும். பல முற்போக்குச் சிந்தனை
அறிவுசீவிகள் சாதிவாத பாமக, மதவாத பாஜக, இனவாத நாம் தமிழர் போன்ற
கட்சிகள் வீழ்ந்ததற்காக தமிழகத்தில் பெரியார் மண் உயிர்ப்போடு
இருப்பதாகவும், இங்கே அவற்றுக்கு வேலையில்லை என்பதாக இத்தேர்தல்
காட்டுகிறதென பூரித்துப்போகிறார்கள­். அப்படியெனில் ஜெயாவின் அதிமுக
கட்சியானது பகுத்தறிவை புகட்டும் கட்சியா? அதிமுக பார்ப்பானிய
இந்துத்துவத்தில் வராதா?
அதிமுக சாதியவாதத்திற்கு இடம் தரவில்லையா? இனவாதத்திற்கும்
அதிமுகவிற்கும் வெகுதூரமா? அந்த முற்போக்கு அறிவுசீவிகளே பதிலெழுதட்டும்.
ஒட்டுமொத்த பார்ப்பானியத்தின் முகங்களாகவே அதிமுக இருக்கிறது என்பது
உலகறியும். அதற்கான சான்று ஜெயா தொலைக்காட்சியில் ஜோதிட சிகாமணிகள்
இடம்பெற்றதையும், கருணாஸ்,தனியரசு போன்ற சாதிவாதிகள் வெற்றிபெற்றையும்
மிகத்தாராளமாக குறிப்பிடலாம். முதலில் முற்போக்காளர்கள் தங்களை தாங்களே
திருத்திக்கொண்டு மக்களிடம் நேரடித் தொடர்பில் அவர்களோடு நெருங்கிப் பழகி
முற்போக்குச் சிந்தனைகளை விதைக்கவும், கற்பிக்கவும் செய்தலே போதுமானதாக
இருக்கிறது. மேலும் சனநாயகம் வீழ்ந்து இங்கே பணநாயகம் தலைதூக்குவதை 570
கோடிகள் சுமந்த கண்டெய்னர்கள் கண்ணெதிரிலேயே காட்சியாகின்றன. அதிலிருந்து
தமிழகத்தை மீட்டு மீண்டும் சனநாயகம் அமைக்க வேண்டிய பொருப்பும் உள்ளது.
இனிவரும் ஐந்து ஆண்டுகளில் நமது மக்களை ஆளப்போகும் அதிமுக அரசிடமிருந்து
எந்தவித நலத்திடங்களையோ, சமூக முன்னேற்றங்களோ எதிர்பார்க்க முடியாது
என்பது மிகுந்த வேதனைதான் என்றாலும் அதற்குச் சவாலாக ஒரு மாபெரும்
எதிர்கட்சியாக திமுகவை பெற்றிருக்கிறோம் என்பது மகிழ்சியே, திமுகவிற்கு
வாழ்த்துக்கள். சர்வாதிகார ஆட்சியை ஓரளவிற்கு திமுக அடக்கி தன்
கட்டுக்குள் கொண்டுவரும் என எதிர்பார்ப்போடு இருக்கிறோம் அவ்வளவே,,,

6 comments:

 1. வைகோவின் சதி திட்டத்தை முறியடித்து இருந்தால் dmk ஜெயித்து இருக்கும் !

  ReplyDelete
 2. ஏன்? இப்படியும் சொல்லலாமே இதனை,,,
  மநகூவின் ஆட்சியதிகார பகிர்வு கொள்கைக்கு திமுக உடன்பட்டிருந்தால் திமுக வென்றிருக்கலாம் தானே! போக சாதிய ஓட்டுகளை நம்பி திமுக என்றுமே இருந்ததில்லை என்கிற வரலாறு இருந்தும், வெறும் லெட்டர் பேர்டு கட்சிகளோடு தன்னுடைய இரட்டை இலை சின்னத்திலேயே தமிழகத்தில் அதிமுக வென்றிருக்கிறது எனில் இங்கே திமுகவின் பலம் என்ன? ஆக தோல்வியை தழுவிய கட்சிகளின் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மற்ற தலைவர்களை குற்றம் சொல்வதை தவிர்த்து வெகுசன மக்களை நெருங்கி அவர்களுக்காக களப்பணிகளில் ஈடுபடுதலே சிறந்த பணியாகும் என்பது இப்பதிவின் நோக்கம் .
  தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

  ReplyDelete
 3. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆ.தி.மு.க வேட்பாளர்கள் யாரும் ஜெயிக்கவில்லையாம்

  ReplyDelete
 4. அறிந்தேன் தோழர்!
  தங்கள் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 5. அருமையான தகவல்
  சிறந்த பதிவு

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்

இதோ இன்னொரு கயர்லாஞ்சி..! விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி ம...