நான் அனாதையாக்கப்பட்டுள்ளேன்

என் உயிர்வலி
மரணத்தால்
இருந்திருந்தால்
வேதனைகளை
வாடைக் காற்றோடு
உலவ விட்டிருப்பேன்
ஏன் ஏமாற்றப்பட்டேன்
நான்
நட்பெனும் ஆக்ஸிஜனில்
நயவஞ்சகமாய்
விஷமேற்றி
கொல்லத்துடிக்கும்
நண்பன் அவனென
தெரிந்த நாளொன்றில்
இறந்துவிட்ட
என்னை நோக்கி
வீசப்பட்ட ஆயுதங்களில்
உயிரற்ற
உடம்புச் சதைகளை
உண்டு வாழ்கிறது
அந்த ஆயுதமேந்திய
கைகள்
பகலிலும் இருள்சூழ்ந்து
பதற்றமாகி
நீலக்கடலும் கறுப்பென
காணும் எனது
கண்களுக்கு நட்பென்பது
நஞ்சு விஷமென
மூளைக்கு தகவலனுப்ப
என்னை நானே
சந்தையில்
தொலைத்து விட்டேன்
விழுந்து கிடக்கவில்லை
நான்
வீழ்த்தப்பட்டிருக்கிறேன்
ஒரு போலியான
நட்பெனும் சதியால்
சரி போகட்டும்!
சமாளிப்புகளே இங்கே சமாதான
பேச்சுவார்த்தைகளாக
இருக்கையில்
சகஜமாகிப்
போனதெனக்கு அந்த
துரோகத்தின்
வலைப்பின்னல்
வாழ்க்கையில்
நீந்தும் போது
வலையில் சிக்குவது
இயல்புதானே
உணர்ந்த பொழுதில்
வந்து சேர்ந்தது
மற்றுமொரு
நட்பெனும்
மீன்வலைகள்
உறங்கி கிடந்த
ஆழ்மனம்
உயிர் பெற்றெழுந்து
எனக்குள் சுருண்டு
விழுகிறது அடுத்தடுத்த
நட்பு
ஏமாற்றங்களால்

ஆமாம் நான்
அனாதையாக்கப்பட்டுள்ளேன்
வேண்டுமென்றே,
ஆனாலும் மிகபிடிக்கிறது
அதுவெனக்கு,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்