28/03/2016

தனியார் துறையில் இடஒதுக்கீடு? மோடி அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி கேள்வி?

"டாக்டர் அம்பேத்கர் மீது உண்மையான மரியாதை இருக்குமானால் அவர் கண்ட
சமத்துவக் கனவு நிறைவேற தனியார்துறையில் இடஒதுக்கீட்டை பிரதமர்மோடி
அறிவிக்கட்டும்," என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்
செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்."அம்பேத்கர் 125வது
பிறந்தநாள்விழாவை பெரிதாகக் கொண்டாடப்போவதாக பாஜக அறிவித்திருக்கிறது.
அவர் பிறந்த மாவூ கிராமத்திற்கு ஏப்ரல் 14 அன்று செல்லப்போவதாக பிரதமர்
அறிவித்திருக்கிறார். அம்பேத்கரின் லட்சியங்களை பாஜக நிறைவேற்றுகிறது
என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்படுகிறது.
அம்பேத்கர் விழாவை உடலில் அணியும் பகட்டான ஆபரணமாகப் பயன்படுத்தாமல்,
தனியார்துறையில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவீர்" என்றார்
யெச்சூரி.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சனிக்கிழமையன்று
(மார்ச்26) சென்னையில், அம்பேத்கர் 125வது பிறந்தநாள் விழாவையொட்டி "உயர்
கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகளை ஒழித்திட…" என்ற தலைப்பில்
சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் நிறைவுரையாற்றிய யெச்சூரி
இவ்வாறு குறிப்பிட்டார். அவரது உரையின் சில பகுதிகள் வருமாறு:கடந்த
ஓராண்டில், தங்களது உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள்மீதான
தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக
மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்குபோடப்படுகிறது. கல்வி வளாகக் கொலையாக
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை நடக்கிறது.
இந்த ஓராண்டில் நாட்டின் பல பகுதிகளிலும் சாதி ஆணவக்கொலைகள் ஒரு
பாய்ச்சலாக அதிகரித்திருக்கின்றன.பாஜக, அதனை இயக்கும் ஆர்எஸ்எஸ் இரண்டுமே
அம்பேத்கர் கொள்கைகளுக்கு நேரெதிராகவே செயல்படுகின்றன. நாட்டின் அனைத்து
மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தர் குடியரசுத்தலைவர்தான். அவருடைய
தலைமையில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் ஹைதராபாத்
பல்கலைக்கழகத்திலும் இப்படியெல்லாம் நடக்கிறது'எச்ஆர்டீ' என்பது 'ஹியூமன்
ரிசோர்சஸ் டெவலப்மென்ட்' – அதாவது மனித வள மேம்பாட்டு அமைச்சகம், இப்போது
'ஹிந்து ராஷ்ட்ரா டெவலப்மென்ட்' அமைச்சகமாக மாறியிருக்கிறது.பாஜக
ஆட்சியில் நாடு ஒரு அங்குலம் கூட முன்னேறிவிடவில்லை. பளபளப்பான
நிகழ்ச்சிகள்தான் நடந்திருக்கின்றன. இவர்கள் பெரிதாகச் சொன்னது
போல்அந்நிய முதலீடுகள் வந்து குவிந்துவிடவில்லை. அதை மறைக்க இப்படி
தேசியவாதம் கிளப்பப்படுகிறது.
உண்மையான தேசியம் என்பது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்
வளர்ப்பதுதான். சமத்துவம் இல்லாமல், சகோதரத்துவம் இல்லாமல் சுதந்திரம்
இல்லை என்றார் அம்பேத்கர். கம்யூனிஸ்ட்டுகளும் அம்பேத்கரும் சந்திக்கிற
இடம் இதுதான்.இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள இருப்பதை அறிந்து
ஒருவர் வேண்டுமென்றே எனது கைப்பேசிக்கு "பாரத் மாதா கீ ஜே" என்று
குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். அந்த முழக்கத்தில் எனக்கொன்றும்
சங்கடம் இல்லை. அவருக்கு நான், "இன்குலாப் ஜிந்தாபாத்"என்று பதில்
குறுஞ்செய்தி அனுப்பினேன்.ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்போது இந்திய
மாணவர் சங்கம் வெற்றிபெற்றிருக்கிறது. இப்போது அந்த வளாகத்தில் 'லால்
சலாம்' (செவ்வணக்கம்) என்றமுழக்கம் ஒலிக்கிறது. 'ஜெய் பீம்' என்ற
முழக்கமும் எழுகிறது. இந்த இரண்டு முழக்கங்களோடும் இணைந்ததே பகத்சிங்
எழுப்பிய 'இன்குலாப் ஜிந்தாபாத்' (புரட்சிஓங்குக) முழக்கம். இவையும்
தேசப்பற்று முழக்கங்கள்தான். இந்த முழக்கங்கள்தான் அம்பேத்கர் முன்வைத்த
சமத்துவ லட்சியத்தை அடைய உதவும். பொது எதிரியை வீழ்த்த இந்த முழக்கங்கள்
தேவை.மதவெறி சார்ந்த இந்துராஷ்டிர நோக்கம்தான் அந்தப் பொது
எதிரி.ஒருவருக்கு ஒரு வாக்குரிமை என்பதுஉறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அம்பானிகள் முதல் எளியோர் வரையில் யாரானாலும் ஒரு வாக்குதான்.
ஆனால் இதன் மூலம்ஒரே மனிதருக்கு ஒரே மதிப்பு என்ற லட்சியத்தை எட்டிவிட
முடியுமா? இந்தியாவில் இன்று அமெரிக்க டாலர் மதிப்பில் பில்லியனர்கள் 100
பேர் இருக்கிறார்கள். பில்லியனர் என்றால் இந்தியப் பண மதிப்பில் ஒரு
லட்சம் கோடி ரூபாய். இந்த100 பேரின் சொத்து மதிப்பு, இந்தியாவின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியளவு. இதே நாட்டில்தான்,
அன்றாடம் தங்கள் குடும்பத்திற்காக உழைத்தாக வேண்டியவர்களில் 90
சதவீதத்தினருக்கு, மாதம் 10,000 ரூபாய் கூட வருவாய் இல்லை என்ற நிலைமை.
இதுதான் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரே மதிப்பா?மோடி அரசின் கொள்கைகளால்
விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. தொழில்கள் முடங்கிப்போயிருக்கின்றன.
வெளிநாட்டு நிறுவனங்களும் வெளியேறுகின்றன. சென்னை அருகில் நோக்கியா
நிறுவனம் மூடப்பட்டது இப்படித்தான். இப்படிப்பட்ட கொள்கைகள்தான் தேச
நலனுக்கு எதிரானவை; மாணவர்களின் முழக்கங்கள் அல்ல.அரசமைப்பு சாசனத்தை
அறிமுகப்படுத்தியபோது அம்பேத்கர், "வரலாறு மறுபடி பழைய நிலைக்குத்
திரும்புமா, நாம்சுதந்திரத்தை இழப்போமா" என்ற கேள்விகளை முன்வைத்தார்.
"இந்திய மக்கள் தங்களுடைய மதம், சாதி, இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து
அதற்கெல்லாம் மேலானதாக நாட்டை வைப்பார்களானால் நாட்டைப்
பாதுகாப்பார்கள்," என்று அவரே பதிலளித்தார்.பாஜக-வும் அதன் சகோதர
அமைப்புகளும் ஒரு மதம், ஒரு கலாச்சாரம் ஆகியவற்றை மற்றவற்றை விட மேலானதாக
முன்வைக்கின்றன.
இதை விமர்சிக்கிறவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள்
சுமத்தப்படுகின்றன. இரண்டு இளைஞர்கள் பசுக்களைக் கடத்துகிறார்கள் என்று
அடித்துக்கொல்லப்பட்டு தூக்கில்தொங்கவிடப்பட்டார்கள். பசுக்களைப்
பாதுகாக்கட்டும். ஆனால் மனிதர்களைக் கொன்றுதான் பசுக்களைக்
காப்பாற்றுவீர்களா?இந்த நிலைமைகள் தொடரும் என்றால், அம்பேத்கர் கனவுகள்
புத்தகங்களில் மட்டுமே இருக்கும். உண்மையான இந்தியாவில் சமத்துவமற்ற
நிலைமைகள்தான் நிலைபெறும். அம்பேத்கர் 125வது பிறந்தநாள் விழாவில் இதுவே
மையமான செய்தி.மகாத்மா ஜோதிபா புலே, காந்தி, அம்பேத்கர், பெரியார் ஆகிய
தலைவர்கள் மனிதர்களின் சம மதிப்புக்காக லட்சக்கணக்கான மக்களைத்
திரட்டினார்கள். ஆனால்இன்றும் மனிதர்களே கையால் துப்புரவுப் பணியில்
ஈடுபடுவது உள்ளிட்ட
பாகுபாடுகள் சாபக்கேடு போல் தொடர்வது ஏன்? இட ஒதுக்கீடு ஆட்சியாளர்களின்
பிச்சையோ, கருணையோ அல்ல.
அது நெடும்போராட்டத்தால் நிலைநாட்டப்பட்ட உரிமை. ஆனால், தலித் மக்கள்,
விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டோரின் சமூகப் பொருளாதார மாற்றத்திற்காகப்
போராடாமல், சமூக நீதியை நிலைநாட்டிவிட முடியாது. இந்த மக்களின் பொருளாதார
வலிமையை உறுதிப்படுத்துவதன் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த
முடியும்.பொருளாதார ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுவது, சமூக
ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது என்ற இரண்டு கால்களில் நாம்
நின்றாக வேண்டும்.
"நீலவானத்தில் சிவப்பு நட்சத்திரம்" என்று குறிப்பிட்டார்கள்.
'விப்ஜியார்' எனப்படும் வானவில்லின் ஏழு வண்ணங்களில், நீல வண்ணக்
குடும்பத்தைச் சேர்ந்தவயலட் (ஊதா) ஒரு பக்கமும், ரெட் (சிவப்பு) இன்னொரு
பக்கமும் இருக்கின்றன. ஆம், சிவப்பு, நீலம் ஆகிய இரண்டிற்கும் இடையேதான்
இதர அனைத்து வண்ணங்களும்!இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். அவரது
ஆங்கில உரையை பாரதி புத்தகாலயத்தின் ப.கு. ராஜன் தமிழாக்கம் செய்தார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்

இதோ இன்னொரு கயர்லாஞ்சி..! விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி ம...