ஒருதலைக் காதல்

வானத்து
பிறை வெளிச்சம்
அப்போதுதான் மறைந்திருக்க
அது வந்துபோன
சுவடுகளைத் தேடி
மௌனமாய்
அலையும்
மழைமேகத்திடம்
ஒரு கைதியாய்
ஒரு குற்றவாளியாய்
கூண்டில் ஏற்றப்படுகிறது
ஒருதலை காதல்

அதுவரையில்
காதலை புகழ்ந்து பாடிய
பேனாவின் முள்
குத்திக்கிழிக்கிறது
நிராகரித்த
கணத்தில்

கவிதை சுமக்கும்
காகிதங்களை
கப்பலாய்
மிதக்கவிடக்கூட
அருகதையற்று
அவஸ்தையில்
நீளுகிறது அதன்
நாட்கள்

அழுவதை யாரும்
பார்த்திட வில்லை
உருகும் பனிமலைகள்
உள்ளம் வெடித்தெழும்
எரிமலைகள்
ஒன்றிணைந்து
ஒருதலைக் காதலை
உலகிற்கு
உணர்த்திவிட்டுப் போக
உணர்வற்று வெறும்
வர்ணனை பூசப்பட்ட
காதல்
கவிதைகள்தான்
என்ன செய்யும்

இதயத்தை குத்திக் கிளறி
இரத்தத்தால்
மூழ்கடிப்பதை தவிர
எச்சரிக்கைகள்
வெறும்
எச்சில் உமிழும்
ஒரு எதேச்சதிகாரமாய்
காதலுக்கு முன்
மண்டியிட்டு
சவால் விடும்

ஒருதலைக் காதலை
சுமந்தவர்களின்
கர்வத்தை உடைக்க
கண்ணீர் மடையை
உடைத்துக் கொண்டு
வெளிவருகிறது
தன்னிலை
நினைத்தழும்
பதற்றத்தையும்
இந்த காதல்
ஆட்கொண்டுத்தான்
போகிறது

தன் ஆளுமைக்கு
உட்பட்டு அனாதைகளாக
திரியும் ஒருதலைக்
காதலின் சுகத்தை
அனுபவிக்கும்
மனங்களோ
ஆனந்தப்படுகிறது
அப்படியே நிராகரித்து
போன வார்த்தைகளின்
மிச்சங்களை தன்னால்
இயன்றவரை
ஏதோ ஓரிடத்தில்
பேசத்தான் வைக்கிறது
காதல்,,,

ஏதுமற்ற கையறு
நிலையில் கண்களை
மூடிக்கொள்கிறார்கள்
ஒருதலைக் காதலர்கள்

இங்கே நிராகரிப்பின்
சமாதான அறிவுரையை
ஏற்றுக்கொள்ள
இன்னமும்
தயாராகவில்லை

ஆனாலும் யாவரும்
வலிதெரியாமல்
அழுது விடுகிறார்கள்,,,

ஒருதலைக் காதலின்
வலி,வேதனை,துக்கம்
அதிலொரு ஆனந்தமென
அனுபவித்து அசைபோடுவது
அனைவருக்கும்
இருக்கத்தான் செய்கிறது
அது பசியுமல்ல
அது தாகமுமல்ல
அது தவிப்புகளுமல்ல
அதுவொரு சுகமான
அனுபவக் காதல்,,,

Comments

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்