காதலித்தேன் அவளை, என்பதற்காக!

காதலித்தேன்
அவளை என்பதற்காக
என்
ரத்தம் குடித்து
சதையை
ரசித்துண்ணும்
மிருகங்கள்
உடனே துப்பியதாம்
சதையை

என் கண்ணீர்
உப்பற்று போனதாம்

சாதியுப்பு என்
சதைமுழுவதும்
தடவி
கடல் மணலில்
காய வைத்தார்கள்

உப்புக் கருவாடாக
நான் மாறுகின்ற
வரையில்
தணலென் சதையை
உருக்கிக் கொண்டிருக்க

ஒருவழியாய்
தயாராகிவிட்டது
என் சதை
கருவாட்டுக்
குழம்புக்காக

எப்படியும்
நாளைய விருந்தில்
வாழையிலைகள்
எனக்காக அழலாம்

வாழைக் கறை
ஆடைகளில் பட்டால்
போகாதாம்

அவ்வளவான
கெட்டித்தன்மை
ஏன் மனிதர்களின்
கண்ணீரில்
இருப்பதில்லையென

கருவாடாகிப் போன
என்னிடம்
கடல் மணல்
கேட்கிறது

என்ன பதில் சொல்ல?

இனி நன்றாக
சமைத்துண்ணுங்கள்
என் கருவாட்டு சதையை
இல்லையெனில்
என் எலும்பாகிய
முட்கள் உங்களின்
தொண்டைகளை
கிழித்து விடலாம்,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்