சாதியால் செத்தாயே சங்கரா!

ஊழிக்காற்றில் உலர்ந்து
எங்கும் சிதறியோடும்
சருகுகளில்
படிந்து கிடக்கிறது
சங்கரா
உன்
உறைந்த ரத்தம்

சாதியால்
செத்துக்கிடக்கிறாயே
சங்கரா

நாடகக் காதல்
திருமணமே
உன்னை மண்ணில்
சாய்த்ததென்று
சாதி இந்துக்கள்
சாவகாசமாய்
பேசுகிறார்களே

தன்சாதிக்கு பெருமை
சேர்க்கும் ஆவல்
அவர்களிடத்தில்

உன் குருதி வாடையில்
கொஞ்சம் தேநீர்
கலந்து கொடு
சாதிமறுப்பு மணங்கள்
அருந்தட்டும்

சங்கரா நீ
இறந்து கிடக்கிறாய்
உன் காதலெனும்
ஆன்மாவை கத்தியால்
குத்திக் கிழித்த
சாதிவெறியர்களின்
கல்லறையில்
கொலையென்பது
கௌவரமென முதலில்
இடம்பிடித்துவிட
பொதுப்பெயராகிறதது
கௌரவக் கொலையென

மன்னித்துவிடு
சங்கரா

உன் காதல்
மனைவியையும்
எங்களால் காப்பாற்ற
முடியாது

நீ மரணம் தழுவிய
கணத்திலிருந்தே
அரசாயுதங்கள்
அவள்
கழுத்தில் கத்தியை
அழுத்திப்
பிடித்துவிடும்
அதிகாரத்தை
கொடுத்து விட்டோம்

பெயருக்கானதிங்கே
பெரியார் பூமியென்பதை
என்றோ நீ
உணர்ந்திருந்தால்
காதலை வெறும்
மயிறென்றுதானே
எழுதியிருப்பாய்

எனக்குத் தெரியும்
சங்கரா
காதலிக்க பிறந்தவர்கள்
சாதிக்கு பிறந்தவர்கள்
இல்லையென்பது

ஒன்று மட்டும் என்னை
குற்றத்தில் நிந்திக்கிறது
சங்கரா

இந்த பிணங்களின்
வரிசையில் நானுமோர்
பிணமாகி கிடக்கிறேன்

உனக்கும் எனக்குமோர்
வேற்றுமையுண்டு

உன் கண்கள் மூடியதும்
கல்லறை தானாக
திறந்து இருட்டுக்குள்
வலிக்கான
மருந்திடுகிறது

நான் கண்களை திறந்தே
வைத்திருக்கிறேன்
வெளிச்சத்தில்
காட்சிகளை
தொலைத்துவிட்டு
கல்லறையில்
உயிரோடு படுத்துறங்கி
கண்டும் கானாது
கடந்துபோகப்
பழகியிருக்கிறேன்

யார் குற்றவாளி
என்பதை காலத்திடம்
ஒப்புவித்து
கடைசியாக
சென்றடைகிறேன்
அடுத்த சூடான
செய்திகளைத் தேடி

நானுமிங்கே
நயவஞ்சகனாக
நடமாடுகின்றேன்
நடிக்கவும்
செய்கின்றேன்

என்றேனும் இளவரசன்
கோகுல்ராஜ் அடுத்து
நீயென
உங்களின்
புனிதக் காதலென்னை
கண்ணத்தில் அறையும்

அப்போதும் நான்
விழிப்பதென்பது
சந்தேகமே சங்கரா!

எங்களையும்
எங்களோடு புனிதக்
காதலையும்
கொலை செய்தான்
இவனென
கைகாட்டிவிடு

தண்டனைகளை
தாராளமாய் ஏற்கிறேன்

உனதுயிர் தியாகத்தை
புரட்சியாக்காத
நானும்
கொலைகாரன்தானே!

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்