பூக்களை கூந்தலிலேற்று

உருகும் பனிமலையில்
என் உணர்வுகளை
புதைத்துவிட்டு
உன் உள்ளங்கை
வெப்பத்தில் உயிரையும்
உடலையும்
இணைத்துவிட்டேன்

என் இருதய துடிப்பில்
ஏதோ
மாற்றம் நிகழ்கிறது

நீயதை கனவு என்கிறாய்
நானதை காதல்
என்கிறேன்

உன் கூந்தலை
தொட்டுப்பார்க்கும்
பூக்கள் கடைசியாக
வந்திறங்கியது
உன் பாதம் தொட

அது தானாகவே
இறங்கியதாய் நினைக்க
எனக்கு மட்டுமே
தெரியும் எனக்காக
வேண்டுமென்றே
கழற்றியெறிந்தாய்
பூக்களையென்று

ஏமாற்றம் விரும்பவில்லை
நான் உண்மையை
சொல்லிவிட்டேன்
பூக்களிடத்தில்

வேண்டாம் வேண்டாம்
வலிவேண்டாம்
சூடிக்கொள் மீண்டும்
என்னை கூந்தலில்

கெஞ்சும் பூக்களோ
உதவிக்கெனை
அழைக்கிறது
பரிந்து பேசுகிறேன்
உன்னிடம்

பாவமாக இல்லையா
கனவை எரித்துவிட்டு
காதலுக்குள் நுழை

பூவோடு நாரும்
மணக்குமாம்
கனவோடு காதலும்
மனம் பேசுமாம்

முத்த வரையறையை
மூழ்கடித்துவிடுகிறேன்
எங்கே தொடங்க
வேண்டுமென யாரும்
ஓதவேண்டாம்
என் காதுகளில்

உன் கழுத்தில்
முகம்புதைத்து
பதிக்கிறேன்
முதல் முத்தத்தை
வெள்ளித் தகடாய்
மின்னும்
வியர்வைத்துளி
உப்பும் இனிக்கிறது

உன் உயிர்த்துளி
உணர்வுகளால்
கசிகின்ற முனகல்களை
சேகரிக்கும் பூக்களை
மீண்டும்
கூந்தலிலேற்றிவிடு

எனக்கு
முத்த வித்தைகளை
கற்றுத்தந்ததும்
அவைகள்தான்,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்