தோழர் ஜீவா அவர்களின் கம்யூனிச தொடக்கமும், காந்திய எதிர்ப்பும்,

கம்யூனிஸ்ட் மாபெரும் தமிழர் தலைவர் ஜீவா அவர்கள் இளமை காலத்தில்
காந்திய நிர்மாணத் திட்டங்களின் மேல் மிகுந்த பற்று கொண்டமையால் காந்திய இயக்கச் செயல்பாடுகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, காந்திய வழி பரப்புரை,மற்றும் ஆசிரமங்களை உறுவாக்குதலென இருந்தார்.
1922 ல் எட்டாவது படிக்கின்ற போதே ஜீவா காந்தியின் ஒரு மேடைப் பேச்சைக் கேட்டு, அந்த பேச்சின் தாக்கத்தால் காந்தியத்தை நேசித்தார். அதுவரையில் தீவிர காந்தியவாதியாக இருந்த ஜீவா
1931 ல் ஈரோட்டில் நவஜீவான் மாநாடு நடைபெற, அம்மாநாட்டில் இந்திய இளைஞர்களை தட்டியெழுப்பிய "லாகூர் வழக்கில்" பகத்சிங்கோடு குற்றம் சாட்டப்பட்டு சிறையிலும் 63 நாட்கள் கொடுங்கோலாட்சிக்கெதிராக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவரான ஜதீந்திரதாஸின் சகோதரர் கிரண்ராஜ் மாநாட்டில் தலைமை தாங்க ஜீவா அம்மாநாட்டில் உற்ச்சாகத்துடன் பங்குபெற்ற காரணத்தால் "மீரத் சதி வழக்கு" பற்றி வாசிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுதான் ஜீவாவின் முதல் கம்யூனிஸ அறிமுகமாக இருந்திருக்கிறது. அதன்பிறகு 1932 இல் "சட்டமறுப்பு இயக்கம்" கொழுந்துவிட்டெரிய தொடங்கிற்று, காரைக்குடியில் ஜீவா தலைமையில் "சண்டமாருதமென" முழக்கமிட்டு போராட்டம் நடத்தினார் . ஜீவா தீவிரமாக இயங்குவதை எதிர்த்த வெள்ளை ஆட்சி 7.1.1932 ல் காரைக்குடி கூட்டத்தில் ஜீவா கலந்துகொண்டு பேசக்கூடாதெனும் "வாய்ப்பூட்டு சட்டம்" உத்தரவை பிறப்பித்தது. அதைமீறி கோட்டையூரில் மேடையேறி முழங்கினார், தடையுத்தரவு மீறியதன் காரணமாக ஜீவா கைது செய்யப்பட்டு சிறையலைடக்கப்பட்டார். "அந்த காலச் சூழலானது கம்யூனிஸ்ட் என்று தன்னை அரசு சந்தேகம் கொள்ளும்படி சொல்லிலோ, எழுத்திலோ, செயலிலோ, ஒருவன் காட்டிவிட்டால் மறுநொடியே அவன் கைது செய்யப்படும் என்கிற பயங்கர நிலை இருந்தது"

சிறையில் ஜீவாவுக்கு மாவீரன் பகத்சிங்கின் தோழர்களான பூதகேஸ்வரதத் , குந்தர்லால் , ஆகியோரோடும் வங்கப்புரட்சியாளர் ஜீவன்லால் , கோஷ் சட்டர்ஜி, போன்றோரின் மூலமாக சோஷியலிஸம், கம்யூனிஸம், போன்ற விடயங்கள் பற்றியும் "சோவியத் யூனியன் அறிமுகம்" பற்றியும் நிறைய கற்றுகொள்ள வாய்ப்பேற்பட்டு கம்யூனிஸ்ட்டாக தம்மை வளர்த்துக்கொண்டார்.
(ஜீவாவும் கம்யூனிஸத்தை சிறையில்தான் கற்றார்)
1932 ஜனவரியிர் தானொரு காங்ரஸ்காரனாக சிறைபுகுந்து, நவம்பரில் கம்யூனிஸ்ட்டாக வெளிவந்ததாக ஜீவாவே குறிப்பிடுகின்றார்.இந்நிலையில் காந்தியத்தை முழுமையாக புறக்கணிக்கிறார் ஜீவா, அதுவரையில் பின்பற்றி வந்த காந்தியத்தை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். காந்தியம் தன்னைத்தானே அறிவு வளர்ச்சிக்கு பயன்படாதென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.
1934 இல் "புரட்சி" ஏட்டில் காந்தியை பகிஷ்கரிக்க ஜீவா அறைகூவல் விடுக்கிறார். காந்தியை நிராகரிப்பதற்குரிய காரணங்களை ஜீவா "புரட்சி" ஏட்டிலேயே கீழ்வருமாறு குறிப்பிட்டு விமர்சிக்கிறார்.
1. காந்தி தன் அந்தராத்மாவின் குரலையே நம்பினார்,பகுத்தறிவை நம்பவில்லை

2. காந்தி வர்ணாசிரம தருமத்தை ஒப்புக்கொள்கிறார்,அதுவே இந்துராம் சாம்ராஜியத்தை உறுவாக்குமென்கிற மதச்சாயத்தோடு சமத்துவத்தை புறக்கணித்து மக்களிடம் இந்துமதத்தை புகுத்துகிறார்.

3. காந்தி ஒரு ஆன்மீகவாதி , அவர் ஒரு பழமைவாதி.

4. காந்தி முதலாளித்துவத்தை அழிக்க விரும்பவில்லை , தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமிடையே "சமரசம்" ஏற்படுத்துவதையே விரும்புகிறார்.

5. எந்திர தொழிலின் யுகத்தில் வாழும் காந்தி குடிசை கைத்தொழிலுக்கு முதன்மை அளிக்கிறார் தவறில்லை, ஆனால் தொழிலாளி அதிலும் சுரண்டப்படுகிறான் என்பதை உணர மறுக்கிறார் .

6. தீண்டாமை ஒழிப்பு , சுயதேவை பூர்த்தி ஆகிய காந்தியின் கருத்துகள் சாரமற்றவை.

7. சாதியத்தை உயர்த்தி பிடிக்கும் விதமான தாழ்த்தப்பட்டோரை "ஹரிஜன்" என்று கூறி முத்திரைகுத்தி சகோதரத்துவத்தை இழிவுபடுத்துகிறார்.

8. காந்தி தன் சுயராஜ் பிரச்சாரத்தை ஆங்கில வெள்ளை ஆட்சியின் ஏஜென்சியா மாற்றிக்கொள்ளவே பயன்படுத்துகிறார்.

9. கேந்திரத் தொழில்கள், போக்குவரத்து சாதனங்கள் ஆகியவைகளை முதலாளிகள் கைவசப்படுத்துவதற்காக வெள்ளை ஆட்சிக்கு ஆதரவாக நிற்பதை காந்தி ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

10. குருட்டு நம்பிக்கை,மற்றும் மத நம்பிக்கைக்கு எதிராகவும் , அர்த்தமற்ற சடங்குகளுக்கு எதிராகவும் மக்களிடம் பெரும் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தாமல் வெறும் "ராமன்" எனும் கடவுளை நம்புகிறார். இதுவொரு பிற்போக்குத்தனமாகும்.

இவ்வாறாக அடுக்கடுக்காய் ஜீவா தன் கூர்மையான , அதே சமயம் மிகவும் விசாலமான சமூக கண்ணோட்டத்துடன் காந்தியையும் , காந்தியத்தையும் , காந்தியின் காங்ரஸையும் கடுமையாக விமரிசனம் வைத்தார். இக்காந்திய விமரிசனத்தை அப்படியே எடுத்துக் கொண்டு அதன் சாரம்சங்களை ஒப்பீட்டளவில் இணைத்துப் பார்த்தால் அம்பேத்கர் அவர்களின் காந்திய விமரிசனத்தோடு தொடர்புடையதாக இருக்கும். அம்பேத்கர் எந்தளவிற்கு காந்தியின் மீது விமரிசனம் முன்மொழிந்தாரோ அதே அளவிற்கு முன்பிருந்த தன் காந்திய பங்களிப்பு அனுபவத்தின் மூலம் ஜீவா முன்வைத்திருக்கிறார் என்பது தெளிவாக புலப்படுகிறது. ஜீவா தன் நிலையினை படிப்படியாக உயர்த்திக்கொண்டு பகுத்தறிவின் மூலமும் தமிழ் இலக்கிய அறிவின் மூலமாகவும் கம்யூனிஸத்தை வளர்த்தெடுக்க பாடுபட்டார். அதுவே அவரை பெருந்தலைவராக்கியது.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்