நான் தாத்தா செல்லம்

கெஜிர் காரம்
கமர்கட்டு
தேன்மிட்டாய்
கடலைமிட்டாய்
எல்லாம் வாங்கி
அழுக்கேறிய வேட்டியில்
இறுக்கமாய்
கட்டி எடுத்துவருவார்
எனக்காக தாத்தா

பெயர்சொல்லி
அழைக்கமாட்டார்
பட்டுக்குட்டி எனும்
செல்லப்பெயரெனக்கு

எங்கோ தொலைவில்
வருவார்
இங்கிருந்தே
ஓடத் தொடங்குவேன்
அவ்வளவு பிடிக்கும்
தாத்தாவையும்
வாங்கி வரும்
தீனிகளையும்

தோளில்
எனை சுமந்து கொண்டு
களைப்பேதுமின்றி
திண்ணையில்
தான் வந்தமருவார்

தன்மொழி மறந்து
என்மொழியோடு
கொஞ்சி
அகமகிழ்ந்திடுவார்

இடுப்பில் என்னது
முடுக்காய் தெரிகிறதே
எனக்கா தாத்தா
எனக் கேட்பேன்
அது என்னவென்று
தெரிந்தும்
தெரியாததுபோல்

முன்னை விட
சற்று அதிகமாய்
எழுந்துவிடும்
கொஞ்சல்கள்
அப்போதும்
பாசத்திற்கொன்றும்
பங்கமில்லை
என்னிடத்தில்

கழுத்தோடு
கட்டியணைப்பேன்
கண்ணத்தில்
முத்தம் பதிக்க

சட்டென
விலகிடுவேன்
குத்துகிறது தாத்தா
தாடியும்
மீசையுமென்று

மெல்லியதாய் சிரிப்பார்
சற்று வாய் பிளந்து
பல் விழந்தபடியால்
கண்ணக்குழி அழகு
தாத்தாவுக்கு

வயசாகுதுல்ல
பட்டுக்குட்டி
என்றுரைத்தபடியே
என் பிஞ்சு கைவிரல்
நகத்தை
கடிக்கத்தொடங்குவார்

அடிக்கடி கிள்ளிவிடும்
பழக்கம்
எனக்குண்டென்று
தெரியாமலா
இருக்கும் தாத்தாவுக்கு

கொஞ்சம் நடிக்க
வேண்டியிருந்தது
மடியை
அவிழ்க்கவில்லை
இன்னமும்
தாத்தா

தாடி மீச குத்தினாலும்
பரவாயில்லை
இந்தா தாத்தா முத்தம்
அப்பாடா
நடித்தாகிவிட்டது

முத்தம் வாங்கிய
பின்னர்தான்
எதையும் தருவார்
தாத்தா
அடியும் அவ்வப்போது
விழும்

பத்திரமாய்
பிரித்துக்காட்டுகிறார்
வாங்கி வந்ததை

அடைந்த
சந்தோஷத்தில்
அப்படியே
பிடுங்கினேன்
தின்பதற்கு அவைகளை

அதட்ட மாட்டாரென்று
எப்போதும் தெரியும்
ஆனால் விதைப்பார்
ஒரேயொரு
விதையை மட்டும்
கண்டிப்புடன்

பகிர்ந்துண்னடி
என் பட்டுக்குட்டி
கூப்பிடு கூட
பொறந்தவகள

சற்று எழும்
கோபம் அத்தருணத்தில்
பழகிப்போனதால்
பகிர்ந்து உண்ணுதல்
பிடித்துவிட்டது
தாத்தாவையும்தான்

இப்போதெல்லாம்
பந்தப்
பிரிவினையோ
போலியான பந்தமோ
எங்களை
நெருங்குவதே இல்லை
எல்லாம் தாத்தாவின்
பாசத்தால் தள்ளியே
நிற்கிறது

தவிப்புகள் மட்டும்
தொடர்ந்தபடியே
தாத்தா தற்போது
உயிரோடில்லை
உள்ளத்தில் எப்போதும்
அவருக்கோர்
இடமுண்டு

நான் வாழ்நாள்
முழுவதும்
என் தாத்தா
செல்லமாகவே
இருந்துவிடுகிறேன்,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்