முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை
முதலாளித்துவத்தில் உழைப்புச் சக்திகள்

நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியிலிருந்து தோன்றிய, புதிய உற்பத்தி முறையே முதலாளித்துவமாகும். நிலப்பிரபுத்துவத்தின் ஊடே தோன்றிய சிறுபண்ட உற்பத்தியாளர்கள், மற்றும் நிலப்பிரபுத்துவத்தால் தூக்கி எறியப்பட்ட, அதவாது நகரத்தை நோக்கி துரத்தப்பட்ட வேலையற்ற பட்டாளம் ஆகியவற்றில் முதலாளித்துவத்தின் தொடக்கம் அடங்கியிருக்கிறது. அதாவது முதலாளித்துவம் தோன்றுவதற்கு முக்கியமான இரண்டு நிபந்தனைகள் இருந்தன.

ஒன்று சிலரது கைகளில் செல்வம் குவிதல், மற்றொன்று தனக்கென பிழைப்புச் சாதனம் ஏதுமற்ற மக்கள் கூட்டம் , இதனை நிலப்பிரபுத்துவம் தனது அழிவின் போது உண்டாக்கியவையாகும். சிறு பண்ட உற்பத்தியாளர்களிடையே தோன்றிய கடுமையான போட்டாபோட்டி அவர்களில் சிலருக்கும் செல்வத்தையும், மற்றவருக்கு அழிவையும் தந்து அவர்களில் பலரை நகரத்தை நோக்கி ஏதுமற்றவராய் துரத்தியது. இவர்களுடன் நிலப்பிரபுத்துவத்தில் உழைத்துவந்த பலருக்கு சொந்த ஊர்களில் வேலை ஏதுமில்லாது, உயிர் வாழ்வதற்கு தேவையான சாதனங்கள் ஏதுமற்றவராய் நகர்புறங்களை நோக்கி துரத்தியது.

இவையே முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு முதன்மையான காரணமாகும்

முதலாளி உற்பத்தி தொடங்குவதற்கு முன், தன்னிடமுள்ள பணத்தைக் கொண்டு தொழிற்சாலைக் கட்டிடங்களைக் கட்டுகிறார், அடுத்து தேவைப்படும் இயந்திரங்களை வாங்கி நிறுவுகிறார், உற்பத்திக்கான மூலப்பொருட்களையும், தொழிற்சாலைக்கு தேவைப்படும் எரிப்பொருட்களையும் சேகரித்துக்கொள்கிறார். இவ்வகையான பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு உற்பத்தியை, முதலாளியால் நிகழ்த்திவிட முடியாது. உற்பத்திச் சாதனங்கள் ஏதுமற்றவராய், தனது உழைப்புச் சக்தியை மட்டுமே விற்கக்கூடிய நிலையிலேயுள்ள தொழிலாளியை, முதலாளி தன்னிடம் உள்ள உற்பத்திச் சாதனங்களுடன் இணைத்து சரக்கை உற்பத்தி செய்கிறார்.

இதுவரை சமூகம் கண்ட உற்பத்தி முறைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, மிகக் குறைவான வரலாற்று கட்டத்திலேயே முதலாளித்துவம் வலுவான உற்பத்திச் சக்திகளைப் படைத்தளித்துள்ளது.

முதலாளித்துவத்தில் உற்பத்தி உறவுகள்

இயற்கை பொருளாதாரத்தில் ஒருவர் தனக்கு தேவை என்று கருதுவதையே உற்பத்தி செய்கிறார். பிறருக்காக என ஒரு பொருளை செய்யும் போது, வேண்டுபவரின் விருப்பத்தை அறிந்த பின்பே உற்பத்தியில் ஈடுபடுகிறார். முதலாளித்துவ சரக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முதலாளியோ தான் விரும்பும் எந்த சரக்கையும் உற்பத்தி செய்ய முனையலாம். இதனால் இவருக்கு எதோ ஒருவித சுதந்திரம் இருப்பது போல் தோன்றும். ஆனால் அவர் சமூக உழைப்புப் பிரிவினையால் கட்டப்பட்டவராவார். தான் விரும்பும் பொருளை உற்பத்திசெய்ய அவருக்கு மூலபொருள், இயந்திரம் போன்ற பொருட்கள் தேவையாய் இருக்கிறது. இதனை அவர் உற்பத்தி செய்திடுவதில்லை. பிற உற்பத்தியாளர் உண்டாக்கிய பொருளை பெற்றே தனது உற்பத்தியைத் தொடங்குகிறார். அதாவது அவர் மற்ற தனிப்பட்ட உழைப்பாளரின் பொருட்களைச் சார்ந்தே இருக்க வேண்டியவராகிறார். ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பும், சமூக உழைப்பின் பகுதியாகவே இருக்கிறது.

எளிய பண்ட பரிவர்த்தனையில் உழைப்பதற்கு தேவைப்படும் சாதனங்களும், உழைப்பும் உற்பத்தியாளரைச் சார்ந்தே நடைபெற்றது. ஆனால் முதலாளித்துவத்தில் உற்பத்தி சாதனங்கள் முதலாளிக்குச் சொந்தமானவையாகவும், உழைப்பதற்கு என்று தனியே தொழிலாளர்களை, வைத்து உற்பத்தி நிகழ்த்தப்படுகிறது. எளிய பண்ட உற்பத்தியின் இறுதி நோக்கம் உற்பத்தியாளரின் சொந்த தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதாகும், முதலாளித்துவத்தில் ஆதாயத்தை அடைய வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் உற்பத்தி நடத்தப்படுகிறது. எனவே இயற்கை பொருளாதாரத்தில் பரிவர்தனையாக செய்யபப்பட்ட பண்டத்திற்கு, சாதாரணமாக பொருள் என்ற வகையிலேயே நிகழ்த்தப்படுகிறது, முதலாளித்துவத்தில் அப்பொருளுக்கு சரக்கு என்று பெயர்பெறுகிறது.

சரக்கு உற்பத்தி என்பது சமூக வேலைப் பிரிவினையிலும், இதனோடு்கூட உற்பத்தி சாதனங்கள், தனிநபர்களிடம் தனியுடைமையாய் ஒன்றுகுவிவதன் மூலமும் தோன்றுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களும், வாங்கப்பட்ட உழைப்புச் சக்தியும், முதலாளிக்குச் சொந்தமானவையாகும், அதனால் எதை உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு, எப்படி செய்யவேண்டும் என்பதை, முதலாளியே முடிவு செய்கிறார். இத்தகைய முதலாளியின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளி வேலை செய்கிறார். தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கை விற்று பணமாக்கி அதனை முதலாளி் சொந்தமாக்கிக் கொள்கிறார்.

முதலாளி, தொழிலாளிக்கு அவரது உழைப்புச் சக்தியின் மதிப்பிற்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதாவது சரக்கு என்ற முறையில் உழைப்புச் சக்திக்கு மட்டுமே இங்கு சம்பளம் தரப்படுகிறது. தொழிலாளி தமது அவசியத் தேவைகளை நிறைவு செய்யப்பட்டால் தான் அவரால் தொடர்ந்து உழைக்க முடியும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு சாப்பட்டிற்கு செலவு செய்கிறார். அவரது ஆடைகள், காலணி போன்ற தேவையான பொருட்கள் தேய்மானம் அடைகிறது. வீட்டு வாடகைக்கு என குறிப்பிட்ட பணத்தை கொடுக்கிறார். முதலாளிக்கான புதிய உயிருள்ள சரக்கான வளர்ந்து வரும் குடும்பத்தையும் கவனிக்கிறார். இந்த செலவிற்கான பணத்தை மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக தரப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளி செலுத்தும் உழைப்பு இரு பகுதியாக செயல்படுகிறது. அதாவது தொழிலாளி வேலை நாளின் ஒரு பகுதியில் தமது உழைப்புச் சக்தியின் மதிப்புக்குச் சமமான மதிப்பை உற்பத்தி செய்கிறார். இதற்கு அவசிய உழைப்பு என்றழைக்கப்படுகிறது. உற்பத்தி செய்த மற்றொரு பகுதிக்கான மதிப்பை தொழிலாளிக்கு பணம் கொடுக்காமல், முதலாளி தனதாக்கிக் கொள்கிறார். இதற்கு உபரி உழைப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த உபரி உழைப்பே, உபரி மதிப்பை தோற்றுவிக்கிறது. அவசிய உழைப்பிற்கு மட்டுமே தொழிலாளி சம்பளம் வாங்குகிறார். உபரி உழைப்பிற்கு என்று எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தொழிற்சாலை முதலாளிக்குச் சொந்தமானவை, அங்கு உற்பத்திசெய்யப்பட் சரக்கு அனைத்தும் முதலாளிக்குச் சொந்தமானதாகிறது, ஆகவே இந்த உபரி மதிப்பு முதலாளிக்கு எவ்வித செலவுமில்லாமல் சென்றுவிடுகிறது.

அதிகமான ஆதாயத்தைத் தேடி அலையும் முதலாளிகள், உற்பத்தி செலவைக் குறைக்க இரு முறைகளைக் கையாளுகிறார்கள்.

முதலாவதாக, உழைக்கும் நேரத்தை நீட்டிப்பதின் மூலம் நடத்தப்படுவது. இது உபரி உழைப்பின் அளவை அதிகப்படுத்துவதால் கிடைக்கிறது. இதுபோன்ற நேரங்களில் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் பகைமையும், எதிர்ப்புகளும் அதிகமாகிறது. இதனை தவிர்ப்பதற்காக இரண்டாம் வழிமுறையை கடைபிடிப்பதிலியே முதலாளி அதிகம் கவனம் செலுத்துகிறார். அதாவது மேம்பாடு அடைந்துள்ள இயந்திரங்களை பயன்படுத்த விளைகிறார். புதிய தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடைந்த இயந்திரத்தை உற்பத்தியில் ஈடுபடுத்துகிறார்.

இயந்திரங்கள் அதிகம் புகுத்தப்பட்ட தொடக்க காலத்தில் தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அதனை அடித்து, உடைத்து துடைத்தெறிய முனைந்தனர். தங்களது வேலையை இயந்திரம் பறித்துவிடுகிறது என்று நினைத்தனர். பிற்காலத்தில் இயந்திரங்கள் தமக்கு எதிரானதல்ல, இவைகளை பயன்படுத்திவரும் முதலாளித்துவ அமைப்பு முறையே பகைமையானது என்பதை கண்டுகொண்டனர்.

முதலாளித்துவத்தின் முரண்பாடும் வீழ்ச்சியும்

தொழிற்சாலையில் புதிய இயந்திரம் புகுத்தப்படும் போது தொழிலாளர்களின் பணிகள் எளியதாக்கப்பட வேண்டும், ஆனால் முதலாளித்துவ உடைமை அமைப்பு, இதற்கு இடம் கொடுக்காமல் உழைப்பின் கடுமையை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

உழைப்பின் உற்பத்தித் திறன், உயர்வதின் மூலம் இயந்திரங்கள் சமூகச் செல்வத்தை அதிகரிக்க செய்கிறது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் தனிச்சொத்துடைமை நிலவுவதால், கிடைத்திடும் பலன்கள் முழுமையையும் முதலாளிகள் தம்முடையதாக்கிக் கொள்கிறார்கள். இதனால் உருவான முரண்பாடு, முதலாளித்துவ அமைப்பு நெடுகிலும் தீர்க்கப்படாமல் தொடர்கிறது.

குறிப்பிட்ட பொருளுக்கு, சந்தையில் பொதுவாய் காணும் தேவையின் அடிப்படையில், அனைத்து முதலாளிகளும் சரக்கை உற்பத்தி செய்கின்றனர். தனது பொருளை சந்தையில் அதிகயாய் விற்கவேண்டும் என்கிற போட்டி முதலாளிகளுக்கிடையே நிலவுகிறது. இதன் விளையாய் அதிக ஆதாயத்தை அடைவதற்கும், சந்தையில் தமது பொருட்கள் மிகுந்த அளவு விற்பதற்கும், பொருளின் விலை, போட்டி உற்பத்தியாளர்களின் சரக்குகளின் விலையைவிட குறைவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, தங்களது சரக்கின் உற்பத்திச் செலவை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதனால் முதலாளிகள் புதிதுபுதிதான தொழில்நுட்பத்தையும், புதுமையான இயந்திரத்தையும், தமது தொழிற்கூடத்தில் புகுத்துகின்றனர்.

சந்தையின் தேவையை நோக்கி பல்வேறு உற்பத்தியாளர்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த திட்டம் ஏதுமில்லாமல் சரக்கை உற்பத்தி செய்திடுகிறார்கள். இதனால் உற்பத்தியில் அராஜகம் (Anarchy of Production) ஏற்படுகின்றது. குறிப்பிட்ட சரக்கின் தேவை சந்தையில் உருவாவதைக் காணும் போது, பல்வேறு முதலாளிகள் அப்பொருளையே உற்பத்தி செய்திட முனைகின்றனர். கால ஓட்டத்தில் அப்பொருளின் தேவைவிட அதிகமாக உற்பத்தியாகிவிடுகிறது, அதனால் உற்பத்தியான சரக்கு சந்தையில் விற்பனையாகமல் தேங்கிவிடுகின்றன. இது போன்ற நேரங்களில் விலையில் கடுமையாக இறக்கம் காண்கிறது. அதானல் உற்பத்தியாளர், அச்சரக்கின் உற்பத்தியை குறைத்துக்கொள்கிறார், அல்லது முழுவதுமாக நிறுதிவிட்டு, வேறொரு சரக்கை உற்பத்தி செய்ய முயல்கிறார்.

ஆதாயம் பெருகுவதையே நோக்கமாக கொண்ட முதலாளிகளுக்கிடையே உள்ள போட்டா போட்டியின் விளைவாக மிகுதியான சரக்குகள் உற்பத்தி செய்து விடுகின்றனர், அதற்கான சந்தையின் தேவையைப் பற்றி கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு மிகுஉற்பத்தி (overproduction) என்னும் சிக்கலில் வீழ்கிறது முதலாளித்துவச் சமூகம்.

முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு முன்பு பல நெருக்கடிகளை சமூகம் கண்டிருக்கின்றன. அது வறட்சி, சுனாமி, பெருவெள்ளம் போன்றவற்றால் ஏற்பட்டவை, அதாவது இவை இயற்கையின் சீற்றத்தால் உருவானவை. மிகு உற்பத்தி என்ற இந்த நெருக்கடியை முதலாளித்துவ அமைப்பில் மட்டும் தோன்றக் கூடியதாக காணப்படுகிறது.

மிகு உற்பத்தியால் வாணிபம் சுருங்குகின்றன, சந்தையில் பொருட்கள் விற்பனையாகாமல் குவிகின்றன, இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையில் உற்பத்தி குறைத்தல், உற்பத்தியை நிறுத்துதல், தொழிற்சாலை மூடுதல் போன்றவை ஏற்படுகிறது. தொழிலாளிகளின் வேலையிழப்பு தொடர்கிறது.

இந்த மிகை உற்பத்தி என்பது, ஒருவகையில் சார்பானதாகும். அதாவது உண்மையில் சமூகத்திற்குத் தேவையானது போக மீதமுள்ளதை, இந்த மிகைஉற்பத்தி குறிப்பிடவில்லை, இந்த முதலாளித்துவ உற்பத்தி முறை, தொழிலாளர் மற்றும் பல வேலையாளர்களை வேலையிழக்கச் செய்து, அவர்களிடம் வாங்கும் சக்தியிழக்க செய்துவிட்டது. முதலாளித்துவம், தனியுடைமை முறையில் செயல்படுவதால், உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், பலன்களை கையகப்படுத்தும் தனிவுடைமை பெற்ற முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையே காணும் முரண்பாடாய் விளங்குகிறது.

முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்பட்ட அராஜக போக்காலும், மூலதனத்தின் உழைப்பைச் சுரண்டுவதின் விளைவுகளாலும், தொழிலாளிகளிடையே வாங்கும் திறனற்றுப் போயிற்று. முதலாளித்துவத்தில் உற்பத்தியின் நோக்கம், மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதல்ல, உழைப்பாளியின் உபரி உழைப்பை சுரண்டி மூலதனத்தை பெருக்குவதே ஆகும்.

முதலாளித்துவத்தின் சரக்கு உற்பத்தியானது, நுகர்வுடன் தொடர்புடையதாகும். நுகராமல் சந்தையில் சரக்கு குவிந்து கிடக்கும் காலகட்டத்தில் உழைப்பாளியும். மக்களும் நுகரமுடியாமல், வேலையிழந்து, பட்டினியில் கிடந்து அவதிபடுகின்றனர்.

முதலாளித்துவ அமைப்பில் மிகுஉற்பத்தி, நெருக்கடி, தேக்கம், ஏற்றம், செழுமை என்ற சுற்று மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. வீழ்ந்து போகாமல் தாக்குப்பிடித்த, தொழில் நிலையங்கள் புதிய ஏற்றம் பெற்று, புத்துயிர் உற்று வளர்கிறது. மீண்டும் முதலாளித்துவத்தில் திறனுடைய தேவையை கணக்கில் எடுக்காமல், மிகுஉற்பத்தி என்ற நிலையை நோக்கிச் செல்கிறது. மீண்டும் சந்தை சுருங்குதல், சரக்குகள் சந்தையில் குவிதல், உற்பத்தியில் வீழ்ச்சி, உற்பத்தி நிறுத்தம், தொழிற்கூடம் மூடுதல் என்ற பழைய நிலைமைகளை விட, கடுமையான நிலைமைகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது.

இந்த உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள மோதல், சோஷலிசப் புரட்சிக்கான அடித்தளத்தை, இந்த பொருளாதார சூழல் அமைத்துத் தருகிறது. உற்பத்திச் சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும், இடையே ஏற்படும் முரண்பாடு தான், புதிய சமூக உற்பத்தி முறைக்கான மாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது. இதைத் தொடர்ந்து சோஷலிச உற்பத்திமுறை தோற்றம் பெறுகிறது.

எழுத்து (ம) ஆசிரியர்

அ.கா. ஈஸ்வரன்

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்