நீயாவது விட்டுக்கொடுத்திருக்கலாம்,,,

உனதாடை
கிழிந்துள்ளது அப்படியே
திரிகிறாயே
கழற்றிக் கொடு
இப்படி
அம்மா அதட்டுகிறாள்

அமைதியாக
அவிழ்த்துத் தருகிறேன்
எனதாடைகளை

வெளித்தோற்றத்து
கிழிசலை தைக்கும்
அம்மாவின் நூலூசிகளால்
நிச்சயம் கோர்த்து
தைக்க முடியாது
என்
பிளந்து கிடக்கும்
மனதினை

மௌனத்தில் ஒருதுளி
விசம் கலந்து
கொடுத்தால் வலியில்லாமல் சாவேன்
என் காதலால் உடைந்த
மனதாலெழும் வலிகளை
விட அதுவொன்றும்
மரணவேதனையன்று

எப்படிச் சொல்வேன்
இதனை என்
அம்மாவிடம்
அவள் அழுவாளா
ஆறுதல் சொல்வாளா
இல்லை கோபக் கொடுஞ்சொல்லாயுதம் தொடுப்பாளா

ஏதுமறிந்திருக்கவில்லை ஏற்படுகிறது அதீத
பயங்கள்

காலங்கள் ஓடியது
தெரியாமல்
கானக்குயில்களின் இசைகளை அருந்தி
பழகிப்போன
காதலனுபவங்களை
கண் சிமிட்டும்
நேரத்தில் கண்ணாடி
உடைவது போல
இருவரின் கண்ணெதிரிலேயே உடைத்து விட்டோம்
காதலையும் காதலில் பூத்த மனதினையும்

யார்மீது தவறு? எப்படி
அத்தவறு நிகழ்ந்தது?
அலசிட வேண்டாம்
அத்தருணத்தில்
நிகழ்ந்துவிட்ட
ஒன்றால் மீண்டும்
மீட்டெடுக்கலாம்
என்றாலும் அப்போதது தோன்றவில்லை

போகட்டும் வழியொன்று
இருக்கிறதே
"விட்டுக் கொடுத்தல்"
எனும் தன்மைகொண்டு

இங்கேதான் இதே
இடத்தில்தான்
செய்துவிட்டோம்
அப்பெருந் தவறை
ஈகோவெனும்
கரும்புகை மூடியது
எங்கள் இருவரின்
கண்களிலும்

முறிந்துபோன
காதலுக்கா முழுநேர
ஒப்பாரிகள்
இங்கே நான் அழுதுக்
கொண்டிருப்பேன்
என அவளும்
அங்கே அவள் அழுதுக்
கொண்டிருப்பாள் என
நானும்
இரவெது விடியலெது
தெரியாமல் குடித்துக்
கொண்டிருக்கிறது
கைக்குட்டைகள்
எங்களின் கண்ணீரை

கிழந்த ஆடையை
தைத்து என் கையில்
திணிக்க அம்மா
உள்ளே வந்தாள்
அழுவதை மறைத்தேன்
நான்

இந்தாடா
தச்சிட்டேன் துணிய
இப்போ போட்டுக்கோ கிழிஞ்சது வெளியே
தெரியாது
ஆனா உள்ளே உம்
கிழிஞ்ச மனச
எதவச்சி யாரவச்சி
தக்கப்போற
"நீயாவது விட்டுக்
கொடுத்திருக்­கலாம்"
எம்மருமவளுக்காக

குளிரில் உறைந்து
கிடக்கும் ஏற்றப்படாத
ஓர் மெழுகுவர்த்தின்
தோற்ற நிழலோடு
நான்
அதிர்ச்சியில் அப்படியே
பேச நாவெழவில்லை
தலைதூக்கி அம்மாவின்
முகம்பார்த்தேன் அவளும் அழுகையுடன்

சத்தமிட்டழுதேன்
என் வீட்டறைகளில்
அலறல் சப்தங்கள்

சந்ததி தெரியாமல்
மூடி மறைத்திருந்தேன்
அம்மா
என்ன மன்னிச்சிடு
தப்பு பண்ணிட்டேன் திட்டிவிட்டேன் அவளை திரும்பிக்கூட பார்க்க
மாட்டேனென்றும்
சொல்லிட்டேன்
திரும்பி அவ வரவே
மாட்டாம்மா!!!

உணர்வுகளை மதிக்க
மறந்ததின் விளைவு
உறவுக் காதலையும்
இழந்துவிட்டேன்
அம்மாவின்
ஆழ்மனதையும் அறிய மறந்துவிட்டேன்

ஆமாம் உண்மைதான்
தன் மகனி(ளி)ன்
ஒவ்வோர்
அசைவுகளையும்
அறிந்து வைத்திருப்பவள்
அம்மாதான்
என் அம்மா அவளை
மருமகளென்றாலே

அப்படியா
எனக்கு நிகழ்ந்தது போல்
எனதருமே காதலிக்கும் நிகழ்ந்திருக்குமா?
அவளம்மா என்னை மருமகனென்று
அழைத்திருப்பாளோ

நாளை விடியலுக்காய்
காத்துக்
கொண்டிருக்கிறேன்
கர்வம் உடைந்து
காதல் வாழலாம்
நாங்களிருவரமே
ஈகோவை புறக்கணித்து
பரிமாறிக் கொள்ளப்
போகிறோம்
விட்டுக் கொடுத்து
வாழ்தலையும் ,
காதலையும்

பெற்றோம் வளர்த்தோம்
என்றில்லாமல் மனதின்
நீளங்களை
அறிந்திருக்கும்
அன்னையர்க்கு
என் நன்றிகள்!

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்