நான் மனிதனாக

கிழித்த உடலில்
வெடித்த எலும்புகள் சூடேறி
மதங்கொண்ட
யானைகளின்
வசம் போக மிச்சமிருக்கிறது
விட்டுச்சென்ற காலடியில் என் உடல்
மண் ஒட்டிய
நிலையில்

விடாது துரத்திய வேதனைகளின் ஊடே உடலை தவிடாக்கும்
ஊறும் எறும்புகளும் எனக்குத் தோழனே

மட்கும் குப்பையாக
மனிதனை ஆக்குவது
மண்ணும், மழுங்காத தீப்பிழம்புமாக இருக்கையில்

இல்லாத இடம்தேடி எங்கே அலைகிறதென் ஆன்மா

விழுந்து விழுந்து விழுதுகளில்
எண்ணெய் தடவியதில்
அழுக்கேறிய அச்சாணியாக
என்னைச் சொருகிய சக்கரம் சுழல்கிறது காலத்தின் சுழற்சியாய்

ஆன்மாவின் ஆச்சர்ய நிகழ்வுகளில் நின்று இருண்ட உலகிற்கு வெளிச்சம் நீட்டும்
தீப விளக்கைத்தேடி
விழி இருண்டு
கிடக்கிறேன்

விளங்கவில்லை
இன்னமும்
ஆதிக்கம் அடுத்து
எதன் வடிவிலென்று

சமூகமே!
குருதியில் சாக்கடை கலப்பது சாதி
மூளையில் புழுக்களை வளர்ப்பது மதம்

விட்டுவிடுங்கள் ஏதேனுமொரு
இயற்கை அன்னை
சாதிமதம் பாராமல்
எடுத்து வளர்க்கலாம் என்னை

அன்னை
இயற்கையோடு
சாதியற்றவனாய் மதமற்றவனாய்
நான் மனிதனாய்

வளர்வதையே விரும்புகிறேன்
வழிவிட்டு
நில்லுங்கள்,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்