பெண்ணியத்தை அச்சுறுத்தும் காவல்துறை

ஆளும் அதிகார வர்க்கத்திடம் சமநிலையுள்ள நியாயத்தராசை
எதிர்பார்ப்பதென்பது இயலாத காரியம் இதனை அதிகார அலட்சியம் எனலாம். அந்த
வகையில் தமிழகத்தை ஆளும் அதிமுக வின் அதிகார அலட்சியமென்பது எப்போதும்
பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் . ஒரு மாநில முதலமைச்சரின்
கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையானது சர்வாதிகாரத்தோடு ஏதேனும் தீயச்
செயல்களை செய்து விடுமேயானால் அதற்கான பொறுப்புநிலை ஆட்சியிலிருக்கும்
முதலமைச்சருக்கு உண்டென அறிக , அவ்வாறான பொறுப்பு நிலையிலிருந்து ஆளும்
அதிமுக எப்போதோ விலகிநின்று அநீதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது என்பதற்கு பல்வேறு நிகழ்வுகளை இங்கே சுட்டிக்காட்ட
வேண்டிய கடமை சமூகத்தின் நல்லிணக்கத்தை விரும்புவோருக்கு அதிகமாக
தேவைப்படுகிறது. அதன்படியே சில நிகழ்வுகளை இங்கே நினைவுபடுத்துதல்
அவசியப்படுகிறது. காரணம் தமிழகத்தை ஆளும் முதலாளித்துவ அதிமுக அரசும்,
அரசின் துணையோடு காவல்துறையும் பெண்களின் மீதான அத்துமீறலை இணைந்தே
செய்கிறது . இதன் காரணமாகவே வெகுசன தமிழ்ச்சமூக மக்களிடம் காவல்துறையின்
மீதான நம்பிக்கையும்,அவர்கள­ை நண்பர்களாக பார்க்கும் மனோபாவத்தையும்
முற்றிலுமாக இழந்து விடுகிறார்கள் . ஊழலோ,லஞ்சமோ அதையும் தாண்டி பாலியல்
தொந்தரவுகளை தருகின்ற காவல்துறையிடம் செல்வதற்கு அச்சம் வருகின்றதென
வெகுசன மக்கள் சொன்னால் அதில் வியப்பேதும் இல்லை , அந்த அளவிற்கு மக்களை
காக்கும் பணியில் இருக்கின்ற காவல்துறையே குற்றச் செயலில் தங்களை
ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது .
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியிருந்து
வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில், காத்துக்கொண்டிருந்த
வேளையில்,ரோந்து பணிக்காக அங்கு வந்த செஞ்சி குற்றபிரிவு தலைமைக்காவலர்
ரமேஷ், என்பவர் அம்மாணவியிடம் , 'யார்?எங்கிருந்து வருகிறாய்? என்னவென்று
விசாரித்துவிட்டு, மாணவி கையில் வைத்திருந்த செல்போனை மிரட்டிப்
பிடுங்கி. அதில் 'ரமேஷ் போலீஸ்' என்று தன்னுடைய எண்ணை பதிவு செய்ததோடு,
மாணவியின் எண்ணையும் அவரது போனில் பதிவு செய்துவிட்டு,அதன் பின்னர் அவரை
வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் வருமாறு மாணவியை
மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அருகில் இருந்த கடையில் தஞ்சம் புக, அன்று
இரவு முழுக்க அந்த மாணவியில் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தலைமை காவலர்
ரமேஷ் பாலியல் ரீதியான தொந்தரவு செய்திருக்கிறார். இதனால் எரிச்சலைடந்த
மாணவி, தனது நண்பர்களிடம் நடந்த சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்,­ அவர்கள்
இந்த தகவலை வாட்ஸ்-அப்பில் உலாவ விட்டுள்ளனர். சிலர் இந்த தகவலை
விழுப்புரம் எஸ்.பியின் வாட்ஸ்-அப் புகார் எண்ணுக்கும் அனுப்பி உடனடி
நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்.
இதையடுத்து விழுப்புரம் தலைமைக் காவலர்கள் ரமேஷின் செல்போன் பதிவுகளை
ஆய்வு செய்தபோது, மாணவியின் செல் போனுக்கு ரமேஷ் பத்துக்கும் மேற்பட்ட
முறை தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தலைமைக்காவலர் ரமேஷை நேரில் அழைத்து விசாரித்துள்ளார்.
குற்றம் நிரூபிக்கப் பட்டமையால் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த
ரமேஷை விரைவில் இடைநீக்கம் செய்யப்படுவதாக தலைமைக் காவல்துறை
தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும் எவ்வித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லையென தகவல் கசிந்த வண்ணமிருக்கிறது.
இச்சம்பவத்தில் அரசும்,காவல்துறையும்­ எப்போதும் குற்றங்களை மறைத்து
மேலோட்டமாக தூசி தட்டிவிடுதல் போல பழைய முறையான "இடைநீக்கத்தையே"
கையாண்டிருக்கிறது அதற்கும் செயல்வடிவம் தர மறுத்து விடுவது தான் அதிகார
வர்க்கத்தின் ஆளுமைத் திறன்.
பெண்களுக்கெதிராக காவல் துறையின் விதிமீறல்கள் காலங்காலமாக தொடர்ந்தே
இருப்பதை எப்போதும் இச்சமூகம் மறந்து விடக்கூடாது ஒப்பீட்டளவில் ஐந்து
சிறைக்காவலர்களால் 2001 இல் ரீட்டாமேரி கற்பழிக்கப்பட்ட கோரச் சம்பவமானது
இதே ஆளும் முதலாளித்துவ அதிமுக அரசின் காலத்தில் நிகழ்ந்தது. அதுபோலவே
2011 இல் விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு பழங்குடி இனப் பெண்களை விசாரணை
என்கிற பெயரில் அழைத்து கற்பழிக்கப்பட்ட (இதில் ஒருவர் நிறைமாத கற்பிணி)
சம்பவமும் இதே ஆளும் முதலாளித்துவ அதிமுக அரசின் காலத்திலே நடந்தேறியதாய்
இருக்கிறது . சர்வாதிகாரத்தின் உச்சத்தில் தலைவிரிக்கோலமாய்
காட்சியளிக்கும் தமிழகத்தின் ஆளும் அரசானது தொடர் மக்கள் விரோத
குற்றச்செயல்களுக்கு தத்தம் ஆதரவு தெரிவித்து வருகிறதென்பது
தெள்ளந்தெளிவாகிறது. இதற்கு எதிர்கட்சிகளும் முந்தைய ஆளும் கட்சிகளும்
விதிவிலக்கை கோரிட முடியாது , மக்களை பாதுகாக்கும் பெருங்கடமை கொண்ட
காவல்துறையே எல்லை மீறுகிறது குறிப்பாக பெண்ணினத்தின் மீதான எல்லைமீறல்
இதுவென்று தெரியாமல் நாம் வழக்கம் போல மறந்தும், மறுத்தும் விடுகின்றோம்.
சமூகமானது காவல்துறைமேல் வைத்திருக்கும் அவநம்பிக்கையை களைவது ஆளும்
அரசிற்கு கடமையாக இருக்கிறது. செயல்பாடுகளை முடுக்கி விடுமா? அரசென்று
எதிர்ப்பார்ப்பிலேயே இன்னமும் வாழ்கின்றார்கள் தமிழர்கள்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்