உன்னை மறந்து,,,

நிஜம்தான் நிஜம்தான் உன்னை
மறந்தது நிஜம்தான்
நிழல் எதுவாக
இருப்பினும் நிஜமாக நீயாகத் தெரிவது
என் கண்கள்
செய்யும்
ஏமாற்று வேலை

விசித்திர பூச்சென்டுகள் போலியெனத்
தெரிந்தமையால்
புதைத்து விடுகிறேன்
என் காதலை

நிஜப்பூக்களை வருடி கார்கூந்தலில்
எப்போது
அமர்த்துகிறாயோ
அப்போது
தொலைத்து விடத் தயாராகிவிடுகிறேன் மறந்தது நிஜமென்பதை

அதுவரையில்
நீயாகவே சூடிக்கொள்ளும் காகித பூக்களுக்கு முன்னால்
காதலித்ததை
மறந்தும் மறுத்தும் கடந்து செல்கிறேன்

நிஜங்களுக்கிங்கே
வாழ வழியில்லையெனில் நிழல்களும்
குடை விரித்தல்
சாத்தியம் தானே

சத்தியம் செய்துவிட முடியவில்லை
மறந்தேனென்று
என்னால்

நிழலோடு நிஜமாகவே
வாழும் பூக்களுக்கு மத்தியில் பொய்யுரைக்க முடியவில்லை

தவிக்கிறேன்
துடிக்கிறேன்
இறுதியில் மூச்சுத்திணறி தவிர்க்கமுடியாதொரு தருணத்தை எட்டிவிட்டபடியால்
சொல்லிவிட்டேன் பூக்களிடத்தில்

பூக்களே
நிஜம்தான் நிஜம்தான்
அவளை மறவாமல்
மனதினில் பூட்டியது நிஜம்தான்

என்ன செய்ய
நான் என்ன செய்ய

அவளோ காகித பூக்களின் நிழலை விரும்புகிறாள்
நிஜமாக ஜொலிக்கும்
உன்னை மறந்து,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்