ஈழம் என்ன விலை

"பழகப் பழக பாலும்
புளிக்குமாம்"
பழமொழி புதுமொழியானதிங்கே
போக்கினை
மாற்றிவர்கள் யாரோ

புதுமொழியரிய
ஆவலா?
வாயடைத்து நிற்க
வேண்டாம் வந்தவழி
தமிழென்று மட்டும்
உணருங்கள்
எங்களுக்கது
போதும்

"பழகப் பழக ஈழம்
புளிக்குமாம்"
புதுமொழி இதுவன்றோ
ஈழத்து வியாபாரச்
சந்தைகளிலே

பற்றி எரிகிறதே
எங்களின் வயிறு
பற்றில்லை யாருக்கும்
இனத்தின் மீதென்று

எல்லாம் முடிந்து
போச்சென்று
ஏட்டில் எழுதவைத்தார்களே

இனத்தை தொலைத்து ஈழத்தை குழியில்
தள்ளி வேடிக்கையும்
விளையாட்டுமாய்
வியாபார விருந்தாளிகள்
வருகிறார்கள்
வழிவிடுவதுதான்
தகுமோ

யாரவர்களோ
எங்கிருந்து
வந்தார்களோ
வியாபாரம்
செய்கின்றார்களே
எங்களின் ஈழத்தை

புலிகளின் பாசம்
தெரியுமா
அவர்களுக்கு

போர்வை போர்த்திக்கொண்டு
புறமுதுகிடாத
புலிகளின் போர் வீரத்தையா
விலைக்கு போசுகிறீர்கள்

வீழாது என்றுமே
ஈழம்

ஆளுக்கொரு கட்சிகள்
ஆங்காங்கே
முளைத்திருக்க
அதிலே எங்கும்
கூடுகட்டி ஈழத்து
குருதிகளை குடிக்கிறதெங்கும்
விஷம்கொண்ட
பட்சிகள்

எவனோவொருவன்
எழுதி வைத்தான்

"நாடுனக்கு என்ன
செய்ததென்று
கேட்காதே , நாட்டுக்கு
நீயென்ன செய்தாயென
உனக்கு நீயே கேட்டுக்கொள்ளென்று"

வாசகத்தை வாசணைத்
திரவியம் போலே உடம்பிலேற்றி குருதிவாடைக்கெதிராய்
களத்தில் வாழ்ந்து காட்டினார்களே
ஈழத்து புரட்சிப் புலிகள்
பாய்ச்சலை உங்களால்
பார்த்துணர பத்து கண்கள் போதாதுதான்

எங்கள் ஈழத்து
செல்வா தெரியுமா உங்களுக்கு

சரிபோகட்டும்
காந்தி தேசத்து கரைபடியா அகிம்ஸை வீரன் திலீபனையாவது
தெரியுமா உங்களுக்கு

சரி
அதுவும் போகட்டும்
உலக நாடுகளே
வியப்பில் விழிப்பிதுங்கி நிற்க
எப்படியிவன் முப்படைத் தலைவனானானோ

வானூர்தி இவனுக்கு
குழந்தையாகிறதே
என்று கண்ணை விளக்கெண்ணையால்
நனைத்து நிற்கிறதே
நயவஞ்ச கூட்டம்

அத்தனைக்கும் சொந்தக்காரன் ஏகாதிபத்தியதிற்கு
எதிரிக்காரன்
பிரபாகரனையாவது
தெரியுமா உங்களுக்கு

எதுவும் தெரியாமல்
எடுத்தோம் புகைப்படமொன்றென
சுவரொட்டிகளிலே
பல்லிளிக்கிறீர்களே

பக்திமான்களே
பச்சோந்திகளின்
பாதுகாவலன்களே

காலில் விழுந்து
கெஞ்சிக் கேட்கிறோம்
ஈழத்தை விலைபேசாதீர்கள்
உணர்வுகளை
வியாபாரமாக்காதீர்கள்.

வழிதெரியவில்லை
எங்களுக்கு
மண்டியிடாத தமிழினம்
உங்கள் மடியினில்
விழுந்து கிடப்பதனால்
மண்டியிடுகிறோம்
வழிதெரியவில்லை
எங்களுக்கு

Comments

  1. மனம் கனக்கசெய்கிறது வரிகள்:(
    என்றேனும் எழுவேண்டும் ஈழம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்