மனிதமே செய்வாயா!

என் மதம் இதுவென்று
ஊட்டி வளர்த்திட்டார்கள்
ஊமையாகிப் போனேன்
நான்
வெடித்தது மதக்கலவரம்

என் சாதி இதுவென்று
சமைத்து போட்டார்கள்
காரம் தூக்கலாகி
கைகளில்
ஆயுதமேந்தினேன்
நான்
அழிந்தது மனிதயினம்

நீ ஆளப்பிறந்தவன்
என்றார்கள் ஆயுதம்
என் கைகளை இன்னும்
கெட்டியாக பிடித்திருக்க வெறியின்னும் அடங்கவில்லை
எனக்கு

பெண்ணடிமை போற்று
அதுவே உன் ஆண்மைக்கு இலக்கணமென்று
புத்தகமெனக்கு
கல்வி புகட்ட புறப்பட்டேன்
நான்

விந்தணுக்கள் ஊரெங்கும் பரவ
வீட்டிற்கொரு மரம்
போன்று கண்பார்க்கும்
பெண்களையெல்லாம்
புணர்தலில் பூரிப்படைந்தேன்
நான்

நாடு முழுக்கும்
நானாகி நின்றேன்
என் காலில் விழுந்து கிடக்கிறார்கள் வயதான பெண்களும்

அரசும் நானாகி
அரசனும் நானாகி நாட்டை
ஆள்கிறேன்
அரியணை போதவில்லை என் ராணிகளுக்கு

எனக்கெதிரியாக
எதிரில் நிற்பது
"மனிதம்" ஒன்றே

வீழ்த்தி விடுவேனென
சபதமிடுகிறேன்
நான்

எனக்கு சவக்குழி
என்றோ தோண்டிவிட்டது
"மனிதம்"
எனத்தெரியாமல்

மனிதமே என்
இந்தச் செயலுக்கு
நீயும் ஒருதலைபட்ச
தீர்ப்பு வழங்குதல்
தகுமோ!

மக்களும் நானும்தானே
சேர்ந்தழிக்க
தொடங்கினோம்
உன்னை
எனக்கு மட்டுமேன்
தண்டனை

அவர்களையும்
புதைத்துவிடு என்னோடு

இன்றே
வீழ்ந்துவிடுகிறேன்
மரணக் கைதியின்
கடைசியாசையாக
கேட்கிறேன் மனிதமே
செய்வாயா!
நீ
செய்வாயா!

Comments

  1. அருமையான எழுச்சிமிகுந்த வரிகள் நண்பரே...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்