நலமடைந்து விட்டேன் நிழல் போகவில்லை இன்னும்,,,

உழைப்பிற்கேற்ற உணவின்மையா இல்லை எடுத்துக்கொள்ளும் உணவில் ஏதேனும்
குறையிருக்குமா எதுவும் தெரியாத அதீத சோர்வின் காரணமாக காலையிலேயே
மருத்துவமனை வாசலில்
குடியிருக்க வேண்டியதாயிற்று, எதுவும் மாறிடவில்லை அந்த அரசு மருத்துவ மனையில்,,, நோய்தீர்க்கும் இடமா? இல்லை நோய்தொற்றுமிடமா? என்கிற
சந்தேகத்திலேயே பல தலைகள் அங்கே வருவதும் போவதுமாக இருக்கையில்
அமர்வதற்கேனும் ஒரு இடம் கிடைக்குமா என்றுத் தேடியலைந்த தருணம் அரசியல்வாதிகள் நினைவுக்கு வருகிறார்கள் " பொட்டி மாறினால் பதவியில் இடம்
அவர்களுக்கு,,, எளிதில் அமர்ந்துவிடுகிறார்கள­­். நோயாளியொருவரை
உடனழைத்துவந்த ஒரு தலை நகர்ந்து சென்றதும் இடம் கிடைத்தது எனக்கு ,,
நகர்ந்து போன நபரிடமிருந்து புலம்பலோடு கலந்த வருத்தம் தெரிய
"என்னாதுக்கு இந்த ஆஸ்பிட்டலோ எடுத்ததுக்கெல்லாம் பெரிய ஆஸ்பிடலுக்கு போ!
னு லெட்டர் எழுதி கொடுக்கரானுவ" என்கிற வார்த்தைகளை மருத்துவமனையிலும்
என்னிடமும் விட்டுச்சென்றார். மணி சரியாக பதினொன்றை
தொட்டுக்கொண்டிருந்தத­­ு. இன்னமும் வரவில்லையாம் மருத்துவர் , இதற்கிடையில் நோயின் தாக்கத்தை பொறுக்க முடியாமல் போனவர்களும் தனியார்
மருத்துவச் சாலைகளை தேடி நகரத்தொடங்கினார்கள்.­­ நான் நகரவில்லை "
இன்னமும் நம்பிக்கை கொண்டிருந்தேன் அரசுத்துறையிடம்"ஒரேய­ிடத்தில்
அமர்ந்து கொண்டு கட்டிடச் சுவர்களையும், சுவற்றில் ஒட்டியுள்ள
விழிப்புணர்வு அறிவிப்புகளையும் பார்த்துப் பார்த்து சலித்துபோன
மனநிலையில் கண்களும் கூசித்தான் போகிறது. பார்வையை வேறுபக்கம்
திருப்பினாலும் எங்கும் நோயாளிகளாகவேத் தெரிகிறார்கள். அங்குமிங்கும் என்
கண்பார்வை திசை திருப்பிக் கொண்டிருக்கையில் ஏதோவொரு பார்வை மட்டும்
என்மீதுள்ளது என்பதை எனதுள்ளம் அடிக்கடி உணர்த்திக் கொண்டிருக்க
யாராயிருக்குமென திசையெங்கும் தேடிக் கொண்டிருக்கையில் சிக்கியது அந்த முகம்.நானிருக்கும் இடத்திற்கு எதிரே இடப்புறமாக வளைந்து போகும்
வழித்தடத்தில் தெரிந்தது அந்த அழகான முகம் . ஒற்றைப்பார்வை அதையும் அடிக்கடி சுவற்றில் மறைத்து கொண்டு எட்டிஎட்டி பார்த்த வண்ணம் என்னிடம்
விளையாடிக்கொண்டிருந்­­தது அந்த முகம். கூச்சல் குழப்பம் நிறைந்த அவ்வழி தடத்தில் எவ்விதச் சலனமுமின்றி , முகத்தில் ஒருதுளிகூட கவலைகளை காட்டாமல் என்னையே விழுங்கிக் கொண்டிருந்த முகத்தை முழுதாய் தின்றுக் கொண்டிருக்கும் என் கண்களை என்னாலே கட்டுப்படுத்த இயலவில்லை. எப்படி
என்னால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் வசீகரத்தின் உச்சியில் நிலவு பொழியும் சுவாசக்காற்றை அப்படியே எனக்குள் அடக்கம் செய்து
கொண்டிருக்கிறதே அந்த முகம் . பார்வையில் பட்டதும் பூக்கும் புதுமலர்கள்
புதுவுலகைத்தானே இரட்சிக்க முடியும் . புதுவரவான அப்பூக்களுக்கு இதுதான்
உலகமென்று எப்படித் தெரியும்? எனது கண்களில் தெரியும் புதுமுகம்
பூக்களுக்கு புதுவுலகை அறிமுகப்படுத்துவது போலவே எனது எண்ண ஓட்டங்களை
கட்டவிழ்த்து பரவச் செய்து கொண்டிருந்தேன். இறுதியாக நானிருப்பது மருத்துவ மனை என்ற உண்ர்வை இழந்து அருகில் போய் பேசலாமா? அறிமுகம் எப்படி
செய்து கொள்வது? காரணமேதும் கேட்டுவிடலாமா? எங்கேயோ உங்களை பார்த்திருக்கிறேனே! என்று பொய்ப்பாவனை செய்து விடலாமா? இப்படி இன்னும்
பலமாக என்சிந்தனை இருந்தாலும் எதிர்ப்பார்வையும், என்பார்வையும்
எதிரெதிரே மோதிக் கொண்டிருக்க யாருமங்கே தடையாகவும் இருக்கவில்லை.
இப்படியாக அரை மணிதுளிகள் கடந்த வேளையில் ஒலித்தது அந்த குரல் "குழலி!!!
அங்கே என்ன பன்ற இங்க வா ! " என்றழைத்தது அந்தக் குரல்.மனதிற்குள்
மிகப்பெரும் நிம்மதி என்னை ஆட்கொண்டுவிட்டது. "அப்பாடா! பெயர் தெரிந்து
விட்டது! ஆனால் மீண்டும் தொடர்கிறது ஆச்சர்யங்கள் . பெயரழைத்தும் போகாமல்
அதேயிடத்தில் என்னை நோக்கியே பார்வை வீசிக்கொண்டிருக்கிறத­­ே முகம்! இனி
தேவையில்லை எதிர்பார்ப்பு அழைத்து பார்த்துவிடலாமென்று எனக்குள் முடிவு
செய்துவிட்டு . என்னிரு கைகளையும் ஒருசேர நீட்டி விதைக்கும் பார்வையை
நோக்கி குழலி!!! என்றேன் . எனைநோக்கி ஒரே துள்ளாக ஓடிவந்து அணைத்துக்
கொண்டது அப்பார்வைதனை விதைத்த "குழந்தை" நோய்களே பரந்துபோன பின்னாலை
மருத்துவமனை எனக்கெதற்கு? நலம் விசாரித்து கொஞ்சும் மழலையின் கூடவே
நானுமொரு குழந்தையானேன். குழந்தையுடனான கொஞ்சுதலுக்குத் தடையாக மீண்டும்
ஒலிக்கப்பட்டது குழலியின் பெயர். வந்தாள் குழந்தையின் தாய் , நீ! இங்கே
தான் இருக்கீயா இந்த மாமா உனக்கு பிடிச்சுபோச்சா! தப்பா நெனச்சிக்காதீங்க
இவ எப்பவுமே இப்படித்தான் ஒருத்தவங்கள பிடிச்சு போச்சினா அவங்ககூடவே
ஒட்டிக்குவா! குழலி!!! வா!! போகலாம்! அங்கிளுக்கு "பாய்" சொல்லு!
விடைபெற்றுக் கொண்டாள் குழந்தை, தாயின் கட்டளையால்,,, உடனடியாக அவ்விடம்
விட்டு நகர்ந்தேன். உடலில் சோர்வென்பதோ அல்லது நோயென்பதோ எனக்குத்
தென்படவேயில்லை மீண்டும் புத்துணர்வு பெற்று வாழ இத்தருணமே போதுமானதாக
எனக்குத் தெரிந்தது.பரிபூரனமாக நான் நலமடைந்து விட்டேன் என் கண்முன்னால்
குழந்தையின் நிழல்மட்டும் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்