வழியில் தடங்கல் பூனை

மிகச் சாதாரணமாய்
கடக்க முடிவதில்லை
பூனையை

ஏதோவொன்று
தடுக்கிறதே நமது
பயணத்தை

பூனை குறுக்கே போனால்
போகும் பயணம்
விளங்காதாமே
தடுப்பது யாரென்று
தெரிந்தும் போனது

எதன்மீதோ
மனமோடி
பற்றிக்கொள்ள

பாவம் பூனை
என்ன செய்யும்

பெருந்திரளாய்
வானெழும்
மூடநம்பிக்கையில்
மூழ்கியவனை
மூழ்கடித்தே
வேடிக்கை காட்டுவது
வாடிக்கையாகி
போனது இங்கே

கால்தடுக்கி விழுந்தவனை
காப்பாற்றுவதில்
என்ன சாங்கியம்
வேண்டிகிடக்கு

நீயும் பசிவயிற்றுக்கு
பயணப்படுகிறாய்
பூனையும்
பசிவயிற்றுக்கு
பயணப்படுகிறது

பசியென்று வந்தாலே
பூனையும் நீயும்
ஒன்றல்லவா

எதையும் எளிதாய்
கடந்து விடும்
நீயேன் பூனையை
கண்டால்
புறமுதுகிடுகிறாய்

பயப்படாதே
பகுத்தறிவால்
பக்குவபடு

பூனையில்
சாங்கியம்
விதைத்தவனே
இங்கே
செழிப்பாக
இருக்கையில்

செருப்பில் கூட
சாங்கியம் பார்த்து
செறுக்கடைகிறாயே

சேற்றுப்புழுதியில்
நீயுமோர்
புழுவாய் நெளிகிறாயே

நில் லென்று
உனை தடுத்தவனை
உதைப்பதில்
இங்கே நியாயம்

புனிதமென
பூசியவற்றில்
புரட்டுகள்தான்
உள்ளதென
அறிவுக்கண்ணை
திறந்து பார்

ஆறறிவு ஐந்தறிவை
பார்த்து
அச்சப்படுவது
அவசியமற்றதென
அறிவுக்கண்
அப்போது
அழகாய் விளக்கும்

இனியும் பூனையில்
சாங்கியம் கண்டால்
பால்கூட மிஞ்சாது
பசிவயிற்றுக்கு

போலி புரட்டுகளை
மண்ணில் புதைப்போம்,
அதை கற்பித்தவனை
கல்லறையில்
அடைப்போம்,
எப்போதும் நாம்
ஆறறிவால்
உலகை
உழுதிடுவோம்
வா! மனிதா வா!

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்