டாஸ்மாக்கெனும் சாக்கடையில்

விரலில் மையிட்டு
விழுந்து கிடக்கிறான்
டாஸ்மாக்கெனும்
சாக்கடையில்,,,

தூக்கி தோள் கொடுக்க
கூச்சமெடுக்கிறது
அவன் வாயில்
வந்துவிழும்
வாந்தியிலும்
விழுந்த சாக்கடையின்
நாற்றம்
தெறிக்கத்தான்
செய்கிறது,,,

குடித்திருக்கிறானவன்
தன்னை மறந்து
தன்னுற்றத்தாரை
மறந்து
தன் சமூகத்தையே
மறந்து
தவழ்ந்து தவழ்ந்து
சாலையையும்
சாக்கடையாக்கி விடுகிறானவன்
ஒவ்வாத மதுவின்
வேலையிதுவென
அறிந்தும்
அவ்வப்போது அவனும்
குடிப்பெருமையும்
பேசிவிடுகிறான்,,,

இவனும் இவ்வாழ்வை
புசிக்க விடாமல்
அடுத்தவரின் வாழ்வையும்
அழித்துவிட்டு
வேகமெடுக்கிறான்
வண்டியில்,,,

விழும் மரணச்சத்தங்கள்
இவன் காதுக்கு
மட்டும்
விழவில்லையே
எப்படி?

அவன் மட்டுமா
குடிபெருமை
பேசுகிறான்
இல்லவேயில்லை
டாஸ்மாக்கில்
தன்னை விற்று
போலி மகிழ்சியில்
போதை வேண்டும்
போலி கவலையிலும்
போதை வேண்டுமாம்
இவர்களுக்கு,,,

எதுவும் நிரந்தரமில்லை
மரணம் தவிரவென தெரியாமல்,,,

மரணவேதனையானும்
மன்றாடி வாங்கிய
மதுபாட்டில் முத்தமிட்டு
மனதை இளகுவாக்குகிறதாம்
இளிச்சவாய
சமூகம்,,,

அரசும் ஆதரவாய்
நிற்கையில்
அவர்களும்
என்ன செய்வார்கள்
பாவம்,,,

வாக்குச் சேகரிக்க
வேண்டுமெனில்
மதியாயுதத்தை
மதுவால்தானே
வீழ்த்திட முடியும்
விவரமறிந்த
அரசுதான்,,,

வீழ்ந்து கிடப்போரே
குடிபெருமை
பேசுவோரே
கொஞ்சமேனும்
செவி சாய்த்து விடுங்கள்,,,

குடிப்பது நாட்டுக்கும்
வீட்டுக்கும் கேடென
எழுதி வைத்தவன்தான்
பணக்காரனாகிறான்
இங்கே,,,

படித்தபிறகும்
வாங்கிப்பருகுகிறீர்
பரவாயில்லை,,,
நீங்கள் ஏழையென
பணக்காரனுக்கு
தெரிந்த விஷயம்
தானே,,,

மதுவில் மதியிழந்து
மரணத்தை நீங்கள்
தழுவும் போதேனும்
வளரும் டாஸ்மாக்கையும்
வளர்த்தெடுக்கும்
அரசையும்
வாழ்த்தி விடாதீர்கள்
வருங்கால சந்ததிகள்
பாவம்
வயிற்றில்
அடிக்காதீர்கள்
குடித்துடலை
அழிக்காதீர்கள்
குடிபெருமையும்
பேசாதீர்கள்
பிறப்பெடுப்பதே
நாம்
வாழ்வதற்குத்தானே,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்