பூங்கா நகர்

அதுவொரு
அழகான
மாலைபொழுதென
வர்ணனை
செய்து விட
மாட்டேன்

ஏனெனில்
தினந்தினம்
பூமாலை சூடும்
மாலை பொழுது
எப்பொழுதும்
அழகு தான்

ஏதேனும்
சிற்பிக்குள்
முத்தெடுக்கலாகாதோ
எனும்
ஏக்கம் என்
கால்களுக்கு
எப்போதுமுண்டு

நடைபோடும்
கால்களுக்கு
புன்னகையால்
பொன்னகையிட்டு
வரவேற்றது
பூங்கா நகர்

அதன் இயல்பில்
எவ்வித
சலனமும்
இல்லையென
என் மனம்
கூறினாலும்

உற்று
நோக்குகிறேன்
உள்ளம் பரிமாறுதல்
நடக்கிறதங்கே
சிறுவர்களின்
சிரிப்பொலிகளும்
காதலர்களின்
கண்ணசைவும்
முதோர்களின்
முந்தைய
வரலாறுகளும்
அசை
போடுகிறதங்கே

அமைதியாய்
ஓரிடத்தில் அமர்ந்து
அழகு பூங்காவின்
ரசிகனானேன்

என் ரகசிய
ஊடுருவலை
எப்படியோ
உணர்ந்து
உலர்ந்து கொட்டுகிறது
ஊமையான
செடிகொடிகளின்
பூக்கள்

குனிந்து
உலர்ந்த மலர்களை
மடியினில்
தாங்கினேன்

சினுங்கியது
அம்மலர்கள்
தேனை இழந்து
தேகம் மெலிந்து
இதழ்களை
தொலைத்து
என்னிரு கரங்களில்
முத்தமிடுகிறது
அப்பூங்கா
மலர்கள்

வரலாறு நானறிவேன்
என்னைப் போலவே
நாடிழந்து
மொழியிழந்து
இனமிழந்து
தவிக்கிறது
பூங்கா
நகர் பூக்கள்

முந்தைய
காலத்தில்
முழுநிலவையும்
முகம் பார்த்து
அசைந்தாட
காற்றை அழைத்து
மண் சரிப்பில்
பூமித்தாயை
இழுத்துக் கட்டி
மேலோங்கி நின்று
மேகம் கொண்ட
பொறாமையின்
பேரின்பத்தில்
தளைத்திருந்த
அடர் காடு
அன்றிருந்த
நிலத்தின் கூடு

இன்றோ
அனைத்தையும்
இழந்து
எளிதாய் பறித்துவிடும்
இடத்தில்
பூங்கா நகரென
பெயர்கொண்டு
எழுவது
வீழ்வதற்கே
எனும்
முத்திரையில்
முகம் தொலைத்து
கண்ணீரால்
என் கரங்களை
கழுவுகிறது
அப்பூங்கா
நகர் பூக்கள்

பனிதுளிகளே
கொஞ்சம்
கேளுங்களேன்
பூமியில்
பூக்களிங்கே
பாவமாய்
கல்லறையில்

என் கல்லறையை
அலங்கரிக்கும்
பூக்களே
உங்களின்
கல்லறைக்கு
நானே சாட்சி

விடை பெறுகிறேன்
பூங்கா நகர்
பூக்களே
நாளை விடியலை
உங்களிடம்
நான் வந்து
பகிர்வதற்குள்
பறிக்கத்தான்
போகிறார்கள்
உங்களின்
சுதந்திரத்தை

சூழ்ச்சிகளை
விரைவில்
சூரியனை போல்
சுட்டெரிப்பீர்கள்
எனும்
நம்பிக்கையில்
நானும்
விடைபெறுகிறேன்,,,

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்