சிறுகதை "அவன் எனும் மனிதன்"

அதுவொரு இளங்காலை பொழுது இன்னும் பிரசவிக்காத கடல்தாய்
தம்பிள்ளையான சூரியனை ஈன்றெடுக்க
வலியால் துடித்துக்கொண்டிருந்­த
நேரம். அதற்கு முன்பே அவசர அவசரமாக வானமது வெண்சேலையை இழுத்து மூடியது மேகம்.
கொட்டிய மழை மருத்துவச்சியாக மாறிற்று. அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே!
என்று அவசர அவசரவமாக எழுந்து எப்போதும் போலே தமிழக தலைமையிடத்தையும்
இந்தியாவின் இறுதிமூலையையும் இணைக்கின்ற அந்நெடுஞ்சாலை வழியே தனது
நடைப்பயிற்சியை தொடங்கினான் அவன். வலப்புறம் குடியிருப்புகள் இடப்புறம்
விளைநிலங்கள் இவனுக்கு இடப்புறமே இன்பமாய் இருந்தது இயற்கையை ரசித்தவாரே
இவனும் நடந்தான். ஐநூறு மீட்டர் தாண்டியிருக்க மாட்டான் சாலையின் கீழே
சகதியில் கிடந்தது ஓர் மஞ்சலாடை மூடியிருந்த ஒரு முதிர்ச்சி உடல்
குளிரால் நடுங்கி கிடப்பதை பார்க்கிறான் அவன். பதற்றம் பற்றிக்கொண்டது
அவனுக்கு, இங்கே எப்படி மூதாட்டி உறவினர் யாரேனும் ஊருக்குள்
இருக்கின்றார்களா? ஆம் படுத்திருந்த மூதாட்டியின் பக்கத்திலேயே ஊரொன்று
உள்ளது. நடைபயிற்சியை கைவிட்டுவிட்டு கண்ணில் தெரிந்த காட்சிக்கு
நெருக்கத்தில் சென்றான் அவன் பார்வையிலேயே தெரிந்துவிட்டது பணக்கார
மூதாட்டியென்று! பாவம் எத்தனை பிள்ளைகளோ அவளுக்கு.
பாட்டி!!! எப்படி இங்கு வந்தாய்? யார் கொண்டு வந்து விட்டது? எங்கே உன்
வீடு? பக்கத்தில் இருக்கும் ஊரா? வழிதெரியாமல் வந்தாயா? என்று கேள்விகளை
அடுக்கொண்டே போனான் அவன். பதிலொன்றும் வரவில்லை ஒரேயொரு ஒலி மட்டுமே
வந்திற்று
குளிருது!! குளிருது!! என்று அவ்வொலி கூவிற்று. இதற்கு மேல் தாமதிக்காமல்
அடுத்த கட்ட முதலுதவிக்கு அவசரமாக கிளாம்பினான் வீட்டிற்கு அவன். காற்று
திரும்புதல் போல உடனே பாட்டிக்கு பக்கத்தில் வந்து தான் எடுத்துவந்த
கம்பளியை போர்த்திவிட்டு காலை சிற்றுண்டிக்கு அம்மா சமைத்த நாலு
இட்டிலியை நீட்டினான். கைகளை தூக்கக்கூட பலுவில்லை பாட்டிக்கு, அடுத்த
நொடியே ஊட்டத் தொடங்கினான் .சிறிது நேரம் கழித்து திரும்பவும் கேள்விகளை
அடுக்கினான் இப்போது கூடுதலாக சில கேள்விகள் பிள்ளைகள் இருக்கிறார்களா?
எங்கே இருக்கிறார்களென்று
மீண்டும் மூதாட்டி மவுனத்தையே கடைபிடித்தாள். பேச கூட நாவெழவில்லை சரி
இனிமேலும் கேட்பது வீண் என்றுணர்ந்த அவன் , அருகிலேயே ஓர் முட்புதறில்
சிதறிக்கிடந்த சாக்குகளை எடுத்து அம்முட்புதறுக்கு மேலே போட்டு
தற்காலிகமான தங்குமிடத்தை அமைத்துவிட்டு மூதாட்டியின் அருகே எழுந்திரு
மூதாட்டியே! என்றான் அவன். எழுந்திருக்க வில்லை மூதாட்டி பாவம் இயலாத
நிலை. இருதோளையும் தாங்கலாய் தூக்கி பின் வலக்கையை தன்தோள் மீது போட்டு
தாங்கித்தாங்கி நடந்தான் கடினப்பட்டு தற்காலிக குடிலை அடைந்தான்.
மூதாட்டியை இறக்கிவிட்டு பக்கத்தூருக்கு பறந்தான் எவருக்கும் தெரியவில்லை
பாட்டியை பற்றி? உதவவும் வரவில்லை அவ்வூர் உள்ளங்கள் வேருவழியில்லையென
நண்பர்களை நாடினால் பெற்றோருக்கு பயந்து பதுங்குகிறார்கள். கடைசியில்
தன்னால் முடியுமென முயற்சியெடுத்தான் அவன். அவசரமாக தன்னார்வத்
தொண்டிற்கு தகவல் கொடுத்தும் பயனில்லை பாட்டியின் கோலத்தை பார்த்துவிட்டு
அவர்களும் நடைகட்டினார்கள். இப்படியாக ஓரிரவு ஓடியது .அவ்வப்போதே
பாட்டியையும் கவனித்தபடி , இரண்டாம் நாள் தகவலை வீட்டிற்குச் சொல்ல பயம்,
இன்னும் சுயமாக முடிவெடுக்கும் சூழலே அவனுக்கு வந்துசேர வில்லை.
விடியற்காலையிலேயை கழனியை நோக்கி ஓடினான் பாட்டி படுத்திருந்தாள்
மூச்சிருந்தது பாட்டிக்கு
முகத்தில் சிறு புன்னகை அவனுக்கு. இதற்கிடையே கழனிக்கு சென்றவர்கள்
அவனையும் பாட்டியையும் பார்த்தபடியே சென்றார்கள் கிட்டே! நெருங்கவில்லை
முந்நாள் மூன்று வேளையும் அளித்த உணவினைப் போலே இரண்டாம் நாளும்
அளித்திருந்தான் இரவு ஓடியது.
தொடர்ந்தது மூன்றாம் நாள் திரும்பவும் அதே ஓட்டம் இப்போது முகத்தில்
புன்னகையில்லை அவனுக்கு அசைவற்று கிடந்தாள் பாட்டி. தெரிந்துவிட்டது
இறந்துவிட்டாளென்று கண்கலங்கிடவில்லை அவன்! சமூகம் தானே கலங்கி நிற்க
வேண்டும். இறுதியாக கையிலிருந்த காலை சிற்றுண்டியை தூரே எறிந்து விட்டு
பையிலிருந்த ஐம்பது ரூபாயை பாட்டியின் கையில் திணித்துவிட்டு பக்கத்தில்
இருந்தபடியே அரசு மருத்துவமனைக்கு தகவலளித்தான் அவன். அனாதைப் பினமொன்று
கிடக்கிறதென்று! வந்தார்கள் வண்டி எடுத்துக்கொண்டு பார்த்தார்கள் அவனை
தகவல் நீங்களா தந்தீர்கள்? ஆம் அதோ பினம் என்றான் அவன். பொறுமையாகவே
இறங்கினார்கள் நால்வர் பாடையை எடுத்துக்கொண்டு அருகே சென்றதும் அளந்து
பார்த்துவிட்டு கூடியிருந்தோரை விசாரித்து விட்டு (இறந்தபின் கூடி
விட்டது கூட்டம்) இறுதியாக தூக்கப்போகும் முன்னே
ஒருவனின் குரல் கேட்டது பரவாயில்லை கிழவி கண்மூடினாலும் கடைசிக்காக காசு
வைத்துள்ளதென்று பேசியபடியே பறித்தது கைகள். இனி அடக்கம் அமைதியாய்
நடைபெறுமென்ற ஒரே நிம்மதி மட்டுமே மனதின் ஓரத்தில் அவனுக்கு கொடுத்தது.
அங்கே அழமனமில்லாமல் வீட்டில் யாருமில்லா தனியறையில் அவனது அழுகை
ஒலித்தது. நிச்சயமாக அனாதையாக விட்டுச்சென்ற அப்பிள்ளைகளின் ஒருவனாக
நாமிருந்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி குத்தியபடியே இன்றும்
மனநிறைவில்லாத மனக்கசப்புடனே பல ஆண்டுகளாக தன் வாழ்நாளை கடந்துச்
செல்கிறான் அவன்.

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்