-என்னிரவு நிலவுத்தோழி-

கருப்புடை அணிந்து
நட்சத்திரங்களின்
நாடக வெளிச்சத்தில்
வெட்கப்படும்
முகமணிந்தவளே!

நீயெனைக் கவர
கவசமிட்டாயோ!
ஐய்யோ!
உனது
இழுவிசையால்
இலைவிழும்
மரங்களுக்கிடையில்
சிக்கித்
தவிக்கிறேனோ
நான்!

காதலை உணர்ந்து
கண்ணீரில் நனைந்து
கரைந்து போகாத சுயவலியைச் சுமந்து

அதுவும் இனிதெனக் கண்டு இணைசேரா இம்சையுடனே!
எனைப்போலத் தவித்தவனும்
எத்தனை பேரோ!

தனிமையை தனதாக்கி
தனிமரமே சுகமெனக்
கிடந்த இச்சுகவாசிக்கு
சுமையாக வந்தாயா?
இல்லை!
சுவையாக வந்தாயா?

சட்டென கூறாமல்

சாரலில் நனைந்தபடியே
மேக மடியில்
தலை சாய்ந்துள்ள
நிலவிடம்

நீராடும் சாக்கில்
நிதர்சனமாய்
உரையாடி! உண்மை
இதுவென
உரைத்து விடு
அவளதை
ஏற்றால் உனைநான்
ஏற்பேன்!
இவ்வளவு இடமா? நிலவுக்கென
நீ! கேட்டால்
நிச்சயம் முதலிடம் நட்புக்கெண்பேன்
அது பெருமையோ!
பொருமையோ! பொறாமையோ!
நானறியேன்
அதோ! அத்தோழி
அந்நிலவுதான்
எந்தன் தனிமைக்கு
உறவாடி!
உற்ற நட்பாடியது! அந்நிலவுதான்
எனக்கான
தூதினையும் ஏற்கும்!
பிறர்
தூற்றுவதையும்
ஏற்கும்!

எனக்கான தனிமைப் புலம்பலையும், பூரிப்பினையும்
ஏற்றதும்
அந்நிலவுதான்!

சித்ரவதை செய்யாமல்
சீக்கிரம் நிலவிடம் சென்றுவிடு!

பேசா அந்நிலவின்
மவுனமொழி
நானறிவேன்!
சுயம்வரமா? இல்லை
தனிமைச் சுகவாசியா? எம்முடிவும்

சுயநலமில்லா
என்னிரவு
நிலவுத்தோழி தான்
முடிவு செய்வாள்!

Comments

Popular posts from this blog

அண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

காதல் செய்! ஜென்னி-மார்க்ஸ்