04/06/2016

கிணற்றுக் குளியல்

வெட்டி வைத்த
கிணற்றுக்கு
ஏது வாய்க்கால்
வரப்போரத்து நடைதான்
கிணற்று படிக்கட்டிலும்

நேர்த்தியாக இல்லை
எனினும்
பாதச் சுவடுகள்
பத்திரமாக

ஆழம் அளக்காமல்
பாதம் முதலில்
தண்ணீரில் நனைய
பதற்றமும் கூடவே

தன்னந் தனியாக
ஏதோ ஒன்று
முறைப்பது போலொரு
பிரம்மை

தற்செயலாய் தண்ணீரில்
ஆடும் அலை
தன்நிழலை கக்கும்
ஊமை வெளிச்சத்தில்
இன்னொரு உருவம்
உள்ளிருந்து காலை
பிடித்திழுக்குமா!

ஆனாலும்
பரவாயில்லை
மீன்கள் சுவைத்துன்னும்
அழுக்கில் மறைகிறது
அத்தனையும்

பாறையின் இடுக்கில்
பாம்பொன்று மட்டும்
அசைவுகளையும்
அசட்டு தைரியத்தையும்
கண்ணொற்று
காண்கிறது

விசத்தை உமிழ்வதற்குள்
விரையில்
குளித்துவிட்டு
வீடுதிரும்புதல் நலம்

ஊற்றில் உயிர் பிசைந்து
நிரம்பி வழியும்
நிலத்தடி நீர்
நிறைவாய் இருந்தும்
காக்கா குளியலாகி
பரபரக்க
கரை ஏறுகையில்

தடாலென
வழுக்கிய பாசி
வாய்விட்டு சிரித்தது
விழுந்தியா! விழுந்தியா!
என்று

சுகம் அறிந்து
நாள்கணக்காய்
கிணற்றில் கிடக்கையில்
பொறுமை இழந்து
வலம் வருகிறது
அந்த பாம்பு

நேரமாகிறதென
ஏதோ சமாதானம்
மனதிற்குள்
பயத்தை மறைத்து
பவ்யமாய்
நொண்டிச்சாக்கு

அடுத்தநாள்
ஆள்துணைக்கு
அவனொரு
பாம்பு பிடிப்பவனாக
நிம்மதி பெருமூச்சில்
கிணற்றெங்கும்
கும்மாள நீச்சல்

தீங்கிழைக்காத
பாம்பின் குடியிருப்பு
சீர்குலைய

பயம் பாவத்தை
கழுவிக் கொண்டது
கடைசியான
தலை முழுகலில்,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...