10/05/2016

ஊமைகள் வேட்பாளர்கள் எனில் சட்டசபையிலும் ஊமைகள் தானே!

தமிழகத் தேர்தல் 2016 இன் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துக்
கொண்டிருக்கும் வேளையில் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித்
தலைவர்கள் ,மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள்,­ அக்கட்சிகளின்
பிரச்சார பீரங்கிகளாக களத்தில் இறக்கப்பட்டுள்ள திரைத்துறை நடிகர்
நடிகைகள் கையில் மைக்குடன் பிரச்சார வாகனத்தை அலங்கரிக்கிறார்கள் .
அவர்களின் பக்கத்தில் வெள்ளந்தியாக முகத்தை வைத்துக்கொண்டு எதுவும்
அறியாததுபோல் கைகளை கூப்பிக்கொண்டு பேசாமல் அமைதியாக அந்த தலைவர்கள்
அல்லது நடிகர் நடிகைகளின் பக்கத்தில் தலைவிதியே என
நின்றுக்கொண்டிருக்கி­றார்கள். இதில் அதிகமாய் கவனித்தது ஒன்று அனேக
வெட்பாளர்கள் நிற்கக்கூட முடியாமல் வாகன கம்பிகளில் உடம்பை
முட்டுக்கொடுத்து பரிதாபமாய் சிலையாக நிற்கிறார்கள். இங்கே தான்
வேட்பாளர்கள் மீது
வாக்காளர்களுக்கு சந்தேகக் கேள்விகள் எழுகிறது. அது என்னவெனில்
வேட்பாளருக்கு பேச்சு வருமா வராதா? வேட்பாளர் என்ன ஊமையா? பொதுமக்களை
பார்த்து ஊமையாக கைகூப்பி வணங்கும் வேட்பாளர் வெற்றி பெற்ற பின்
சட்டசபையில் என்னத்த பேசி கிழிக்கப்போகிறார்?
கொஞ்ச நேரம் ஒரு வாகனத்தில் நிற்க முடியாத வேட்பாளருக்கு ஒற்றைக் காலில்
தொங்கியபடி மணிக்கணக்காய் ரயில், பேருந்து பயணம் செய்யும் பாமரனின் வலி
தெரியுமா? தெரியாதா?
தன் சொந்த உடல் மொழியாலும் பேச்சு மொழியாலும் தேர்தல் வாக்குறுதிகளை
தரமுடியாத வேட்பாளர் அதை நிறைவேற்றாமல் போனால் தப்பித்துக் கொள்வாரே!
பிறகு யாரிடம் முறையிடுவது? கட்சி மேலிடம் என்பதும் தலைவர்கள் என்பதும்
கைபேசியில் வரும் "தொடர்பு எல்லைக்கு அப்பால்" என்பதாகவே இருக்கையில்
ஏமாற்றப்படுவது வாக்காளராகிய நாமாக்கத்தானே இருக்கிறோம். இப்படியே
வாக்களிக்காமல் இருந்துவிட்டாலும் சனநாயக உரிமை மீறல் என்பார்களே! சரி
49ஓ வுக்கு போனால் அது புன்னியமற்ற அனாமத்து கணக்காகவே இருக்கிறதே!
இறுதியாக என்னதான் செய்வது? இப்படியான சந்தேக கேள்விகளையும், குழம்பிய
மனநிலையையும் வாக்களர்களிடத்தில் வேட்பாளர்கள் உறுவாக்கிவிட்டுச்
செல்கிறார்கள். வேட்பாளர்கள் தரப்பில் "அதான் தேர்தல் அறிக்கை"
கொடுத்திருக்கிறோமே! எழுத்து ஊடகம் , காட்சி ஊடகம் என அனைத்திலும்
பரப்புரை செய்திருக்கிறோமே அதை பார்த்து, படித்து வாக்களியுங்கள்
எங்களுக்கு என்கிறது.
எல்லாம் சரிதான் பொதுமக்களாகிய எங்களை பார்த்து வாய்திறந்து பேசக்கூட
முடியாத வேட்பாளர்களாகிய நீங்கள் தற்போது ஆளும் அதிமுக ஜெவின் பறக்கும்
ஹொலிக்காப்டரை கண்டதுமே தரையில் மண்டியிடும் அடிமையாளர்களின் அதே
செய்கையைத்தானே கொண்டிருக்கிறீர்கள்.­ அடிமையாளர்கள் என்றுமே குரலை
உயர்த்தி பேசுவதை விரும்ப மாட்டார்கள் என்பதை தானே இது உணர்த்துகிறது.
ஒரு வேட்பாளரின் உடல்மொழி , பேச்சுமொழி, பேச்சின் நயம் , குரலோசை
ஆகியவற்றை வாக்காளர்கள் எதிர்பார்ப்பதில் ஏதும் தவறில்லைதானே! சரி இது
காலங்காலமான முறையென்றாலும் அதனை மாற்றிக்கொள்ள தலைவர்களுக்கும்
வேட்பாளர்களுக்கும் சிக்கலேதும் இல்லைதானே! பிறகேன் வேட்பாளர்களை
பேசுவதற்கு அனுமதிக்க மறுக்கிறார்கள் தலைவர்களும்,
ஒருங்கிணைப்பாளர்களும­்,,, இதில் பிரச்சாரங்களில் ஈடுபடும் நடிகர்
நடிகைகள் காசுக்காகவும் தனது தொழிலின் ஆதாயத்திற்காகவுமே பேசுகிறார்கள்.
ஒருவேளை அவர்களை விட வேட்பாளர்கள் சிறப்பாக பேசக்கூடியவர்கள் எனில்
நிச்சயமாய் அனேக மக்கள் எதிர்பார்க்கும் திரைத்துறை-அரசியல்தல­ையீடு
தொடர்பற்றதாக மாறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. நான் யாருக்கு
வாக்களிக்க விரும்புகிறேனோ அவரின் உண்மைக் குரலை கேட்டு அவர்தம் வாயால்
தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் எனும் நம்பிக்கையை நான் பெற
விரும்புகிறேன் இதில் தவறேதும் எனக்குத் தோன்றவில்லை. தேர்தல் பிரச்சார
இறுதி நாட்களுக்குள் இதனை யாரேனும் வேட்பாளர்கள் நிறைவேற்றுவார்களா?
எனும் எதிர்பார்ப்பில் வாக்காளனாகிய நான்.

எதிர்வினைகள்:

2 comments:

  1. சிந்திக்க வேண்டிய பதிவு...

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...