18/05/2016

சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளான பின்னரும் தலித்துகள் நிலைமை பரிதாபகரமாகவே உள்ளன – சீனிவாசராவ்

சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளான பின்னரும், தலித்துகள் நிலைமை
பரிதாபகரமாகவே உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய
செயலக உறுப்பினர் சீனிவாச ராவ் கூறினார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள தேஷ் பகத் யாத்கார் கூடத்தில் தலித்
ஒடுக்குமுறை விடுதலை முன்னணி சார்பாக சிறப்பு மாநாடு நடைபெற்றது.
இச்சிறப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே சீனிவாச ராவ் இவ்வாறு
கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
"நாட்டில் சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளானபின்னரும் தலித்துகள் நிலைமை
மிகவும் பரிதாபகரமானதாகவே உள்ளது மேலும் இப்போது மோடி தலைமையிலான பாஜக
மத்திய அரசாங்கம் தலித்துகள் பெற்றுவந்த சலுகைகளைக்கூட வெட்டிச்
சுருக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது. தலித்துகள் மீதான
அட்டூழியங்களும் அதிகரித்திருக்கின்றன. தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்
தலித் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர்
கொல்லப்படுகிறார்கள். தலித் மாணவர்கள் பெற்றுவந்த கல்வி உதவித் தொகை
வெட்டப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
மறுக்கப்படுகிறது. இந்துத்துவா சக்திகள் தீண்டாமையையும் சாதி
அடிப்படையிலான வர்ணாச்ரம தர்மத்தையும் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில்
தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறு சீனிவாசராவ் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாப் மாநில செயலாளர் சரண் சிங்
விர்தி உரையாற்றுகையில் தலித் மற்றும் பழங்குடியினர் பிரச்சனைகளை
விவாதித்து, முடிவு கண்டிட நாடாளுமன்ற சிறப்பு அமர்வு நடத்தப்பட
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு
அளிக்கப்பட வேண்டும், தலித்/பழங்குடியினர் துணைத் திட்டங்கள் அரசமைப்புச்
சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட வேண்டும். மத்திய/மாநில அரசுகளின்
அலுவலகங்களில் காலியாக உள்ள தலித்/பழங்குடியினர் இடங்கள் நிரப்பப்பட
வேண்டும், தலித் குடும்பங்களுக்கு இடம் அளித்து, வீடுகள் கட்டுவதற்கும்
நிதி அளித்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தும் உரையாற்றினார்.
தீர்மானம் :
சிறப்பு மாநாட்டில் 2016 செப்டம்பர் 2 அன்று மத்திய தொழிற்சங்கங்கள்
அறிவித்துள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் முழுமையாகக் கலந்து கொள்வது
என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் 2016 ஜூலையில் வடமாநிலங்களைச் சேர்ந்த தலித் ஒடுக்குமுறை விடுதலை
முன்னணித் தொழிலாளர்களுக்காக ஒரு வகுப்பு ஏற்பாடு செய்வது என்றும்
தீர்மானிக்கப்பட்டது.
- தீக்கதிர்

எதிர்வினைகள்:

2 comments:

  1. வருத்தப்பட வேண்டிய விஷயம் நண்பரே

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...