27/02/2016

நாளைய விடியலில் !

நாள் முழுவதும் எனை
அகழ்ந்தெடுத்தவன்
ஒருவழியாய்
விட்டுச்சென்றான்
வாசலில்

உயிரை குடித்தே
தீருவேன் என்று
ஒற்றைக்காலில்
தவமிருக்கும்
உடலசதி மட்டுமே
அலுவல் எனக்கு
கொடுத்த பரிசு

ஏதேதோ என்
மூளையிலோட
முழுக்கு போட்ட
அத்துணை வேலைகளும்
முதுகில் சுமையாகி
என் ரத்தநாளங்கள்
சூடேறி சுருண்டு
விழுந்தேன்
படுக்கையறை
எதுவென்று
அறியாமலும்கூட

உணவின்றி அப்படியே
கண்சொக்கி கிடந்தேன்
இல்லாத இரவுக்கு
உடலுக்கெதற்கு
உணவென்று
ஊமைக் கனவுகள்
கிண்டலடிப்பதை
கேட்கவும்
முடியவில்லை
அதன் வாயையும்
மூட முடியவில்லை

ஆனாலும்
வழக்கமானதுதான்
என் உறக்கம்
தொலைத்த அந்த
இரவுகள் தினந்தினம்
தொந்தரவு செய்வது

மன உலைச்சலின்
மூடிய கதவுகளுக்கு
இடையே திறந்தே
வைக்கப்பட்ட என்
சன்னலின் வழியே
காற்றோடு கலந்து
என் செவி துளைக்கும்
நடுநிசி நாய்களின்
பக்கம் யாரோ ஒரு
இரவுப்பிச்சைக்காரன்
சிக்கியிருக்க வேண்டும்

சிந்திக்க வைத்தது
நாய்களின் குரைத்தலும்
ஊளையும்

இரவு மட்டும்
அவிழ்த்துவிடப்படும்
பெரும் பணக்காரர்களின்
நாய்கள் குரைக்கின்றன
பகலெல்லாம்
கட்டப்பட்டிருந்த
சோகங்கள்
கேட்கத்தொடங்கின
அந்த நடுநிசியில்

அப்பாடா! நிம்மதி,,,

நான் இன்னும்
சுதந்திரமாகத்தான்
சுற்றுகிறேன்
இவ்வுலகில்

இமைகளே
உறங்கத் தயாராகுங்கள்
உலகம் விழித்துவிடும்
தானாக
நாளைய விடியலில்,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...