25/02/2016

ஏற்றுக்கொள்வேன் எதையும்

எதையும்
ஏற்றுக்கொள்ளும்
மனநிலையில்
நானில்லை

இருப்பது இலையுதிர்
காலமாதலால்
இலைகளை புறக்கணித்த
மரக்கிளைகளின் ஒத்த
அசைவுகளை
பெற்றிருக்கிறேன்
நான்

ஒவ்வொரு
விடியற் காலையிலும்
என் வாசலை
மறித்துக்கொண்டு
மடிந்து கிடக்கும்
சருகுகளின் மடியில்
தூங்கி எழுந்திருக்கிறேன்

எனக்கான பூக்கள்
எங்கே?
யாரை?
எப்போது?
சந்தித்தனவோ
தெரியவில்லை

ஆனாலும் மணம்
விசுகிறது
என் மனமுழுக்க
இருக்கும் ஏதோ ஒரு
தயக்கத்தை
வெளியேற்றியபடியே

எனக்குள்
சில மாற்றங்களை அவ்வப்போது
கிளப்பிவிடும் பூக்களே

கொஞ்சம்
சருகிலைகளின்
திசையில் மணத்தை
பரப்புங்கள்
இலையுதிரும்
பொழுதுதான் உங்களின்
மொட்டுகள்
அவிழ்க்கப்பட்டு
இதழ்கள்
விரிக்கப்படுகின்றது

பார்த்து பார்த்து
செதுக்கிய கல்சிற்பக்
கலை வடிவில் உளியும்
சுத்தியும் ஓரத்தில்
ஓரிடம் கேட்கிறது

பூக்களே தந்துவிடுங்கள்
தனக்கான இடத்தை
சருகுகளுக்கு

இப்பொழுது
எதையும்
ஏற்றுக்கொள்ளும்
மனநிலையில்
இருக்கிறேன்
அடுத்ததாக
பூக்களுக்கும்
சருகுகளுக்கும்
எப்படியும் ஓரிடத்தை
ஒதுக்கியாக வேண்டும்
தாய்மரம்

கொளுத்தும்
கோடையானது
துகிலுரித்து
வெட்ட வெளியில்
வெளிச்சமாக காட்டும்
தன் நிர்வாணத்தை
தாய்மரம் எப்படியும்
மறைக்க வேண்டுமே!

எதிர்வினைகள்:

2 comments:

  1. அருமையான பா/கவிதை வரிகள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...