11/01/2016

போதும்,,,

சுத்தமாய் சுரண்டி
எடுத்துக் கொண்டு
தெருவீதியில் ஏங்கோ
தூக்கி எறிந்துவிட
எச்சங்களாய்
ஒட்டிக்கொண்ட
எலும்புக்கூடுகளிலும்
அரசியல் புரிவதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை

உயிர்த் தோ(ழி)ழன்
என வந்து
ஏதோ மனக்கசப்பில்
பழகுதல் தடைபட
பின்னால்
நின்றுக்கொண்டே
பாவி இவ(ளெ)னென்று
எரிதழலில் நட்பை
பொசுக்குவதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை

காதலின் இறுக்கம்
கழட்டி விடுதல்
எனும் புதுமொழியோடு
இரக்கமற்ற மனசாட்சி
வேண்டும் நமக்கது
இயல்பாகவே
என்கிற விஷமியம்
பரப்புவதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை

வெளியில் தாய்ப்பாசம்
உள்ளே முதியோரில்ல
முடிவென
மனிதமிருகமாய்
இரட்டை வேடமிட்டு
வித்தை காட்டுவதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை

அறுபதை தாண்டினாலே
மரணம் அவனுடையது
இழப்பென்று ஏதுமில்லை
எனும்
வெட்டிப் பேச்சுகளோடு
இழவு விழுந்த
அதே வீட்டில்
துக்கம் ஏதுமின்றி
சாக வேண்டிய
வயசுதான் பெருசுக்கு
எனப் பேசுவதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை

சாதியென்று
மதமென்று
சுடுகாட்டைக்கூட
சூழ்ச்சமத்தின்
இருப்பிடமாக்கி
ஒரேயடியாய்
மனிதத்தை
மண்ணில் புதைத்து
மண்டை ஓடுகளை
கழுத்தணிகலானாக
மாட்டிக்கொண்டு
அகோரமாய் சிரிப்பதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...