18/12/2015

சக்கரம்

வணக்கம் சொல்லிவிட்டு
அடுத்த நகர்வை
முன்வைக்கிறது
ஒரு சக்கரம்

அதன் சுழற்சிக்கு
அப்பால் சுழலாத
உலகத்தை
சூழ்ச்சி என்பார்கள்
சுட்டெரிக்கும்
சூரியனையும் சேர்த்து

எதன் மீதும் பாரத்தை
ஏற்றி சுவடுகளாக்காமல்
பாறைகளுக்கு
பஞ்சுமெத்தையாகிறது
அச்சக்கரம்

போகப் போக
முடிவற்ற
ஒரு பாதையில்
மூச்சிரைக்க ஓடி
முன்னேறியதில்
முகத்தில் பொலிவிழந்து
முந்தைய பயண
வரலாற்றை
அசைபோகிறது
அப்போதும்
அசைந்தாடிய படியே

நிரந்தர பொழுதென்று
எதுவுமற்று
எண்ணம் மட்டும்
மணல்வெளியில்
உழல உச்சத்தின்
பெருவிளக்காய்
வெகுண்டெழும்
கானல் நீரில்
பார்வையற்ற தடுமாற்றம்
சக்கரம் காலத்தை
சர்க்கரையாக்கி
சுவைக்கிறது

பார்க்காத
பள்ளங்களில்லை
பார்க்காத
மேடுகளில்லை
சந்தித்திடாத
வலிகளில்லை
கடக்காத தூரமில்லை
தேயாத
அச்சாணிகளுமில்லை
அனைத்தையும்
அதிவேகமாய்
முன்னோக்கி பாய்ந்ததில்
பின்னோக்கி
தள்ளிவிட்டு
தக்கவைத்துக்
கொள்கிறது
தன்வரலாற்று இருப்பை

பொக்கிஷம்தான்
பரப்பளவில்
மறுமலர்ச்சி கண்ட
பெருமை மிகு
சக்கரம் பொக்கிஷம்தான்
ஆனால் அதுவொன்றும்
பெருமைபேசவில்லை
தானொரு
வட்ட நிலவென்று

அதுவே ஆதி
வரலாற்றில்
அசைக்கமுடியாத
நம்பிக்கை சக்கரமாக
இன்னும்
சுற்றிக்கொண்டே
சூரியனை துணைக்கு
அழைக்கிறது
விளையாடும்
பருவத்தில் இன்னமும்
சக்கரம்,,,

எதிர்வினைகள்:

1 comment:

 1. விளையாடும்
  பருவத்தில் இன்னமும்
  சக்கரம்,,,
  நன்று
  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...