18/07/2015

காடுகளின் கண்ணீர்த் துளிகள்

காடுகளை
வேட்டையாடி
நகரத்தை
கட்டிய மனிதன்

காய்ந்த
நதிகளின் மேல்
அனல் சூழ்ந்த மணல்வெளிகள்
எங்கும் காடுகளின் கண்ணீர்த் துளிகள்

அதையும் திருடுவார்களே
பிறவி மனிதர்கள்
எனும் அச்சத்தில்

உடனுக்குடன் உள்ளிழுத்து
காடுகளின் கண்ணீரை
சேமிக்கும்
மிஞ்சிய மரங்கள்
ரத்த வங்கியானதை
இயற்கை அன்னை
நன்கறிவாள்

கட்டிப்பிடித்து
தோழமை பாராட்ட தொலைவிலிருக்கும் வேர்களைத் தேடிக் கண்டுபிடித்து
இயற்கை அன்னை முத்தமிடுவதை

எப்படி நுகர்ந்தானோ தெரியவில்லை
மனிதன்

தொடங்கினான்
மீண்டுமொரு
யுத்தம்

பிரயோகிக்கும்
ஆயுதத்தின்
கைப்பிடியே
மரத்தின்
கொடையென்று
அறியாமல்
மனிதனும் மிருகமாக

அடுத்தது என்ன நடக்குமோ,,, அசையாமல்
நிற்கிறது மரம்
அசையும் மனிதர்களின்
ஆயுதத் தாக்குதலால் உறைந்துபோய்,,,

அதிர்ச்சியோடும்
கவலையோடும்
செய்வதறியாது
மரமிருக்கும் 
அதே நிலையில்
சிலையாகிறது
செவ்வாய்க் கிரகணம்

அடுத்த இலக்கு
செவ்வாயென்று
மனிதன் கர்ஜிப்பதை
காது கொடுத்து
கேட்டது அதுவும்

எதுவும் நடக்கலாம்
மனித அழிவு
உட்பட
இயற்கை அன்னை
மனது வைத்தால்

புரிதலை புறக்கணித்த
மனிதன் பூமியில் பிணக்குவியலாகுதல்
வேண்டுமென

புத்தி புகட்ட
எழுந்து வருகிறாள்
இயற்கை அன்னை
பல அவதாரங்களாக,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...