03/06/2015

வசந்தகால இரவொன்றில்,,,,

வசந்தகால இரவொன்றில்
காற்றுக்கு இரையாகி
சலசலக்கும் சலங்கையொலியை
செவிகளுக்கு வந்துசேர
தடையில்லாமல்
இருப்பதென்னவோ
என் ஜன்னலாகத்தான்
இருக்கிறது

கேளாய்! நீ! கேளாய்!
சருகிலைகளின்
இறுதிச் சடங்கொலியை
கேளாய்! என
ஜன்னல் எனை
துணைக்கு அழைக்க

தூக்கம் தொலைத்தேன்
நான்
எழுந்தேன் மெதுவாக
சோர்வெனை சோதனைக்குட்படுத்த
அதில் மீண்டெழ
உடல் துடிப்பதை
உணர்ந்தவனாக
என்னை நானே
தயார் படுத்திக்கொண்டேன்

சருகுகளின் அழுகையோசை அப்போதும் என் செவிகளில் சூட்டுத்தன்மையை
ஏற்படுத்திக் கொண்டேயிருக்க

தானாகவே
வழிந்தோடிய கண்ணீர் என் பாய்விரிப்பையும் நனைத்து விட
என் ஜன்னலோர
நாற்காலியில் வந்தமர்ந்தேன்

அழுவது சருகுகளேதானென உணர்ந்தேன்
ஏனழுகிறதென்ற
உண்மையும் அப்போதுணர்ந்தேன்

தலைநிமிர்ந்து
வானத்தில் வட்டமிடும் பறவைகளுக்கு
தங்கும் மாளிகையாய் இருந்து மனிதனால் கொலைசெய்யப்பட்ட ஆலமரமொன்று
மரணித்து கிடக்கிறது

அதன் பிள்ளைகள்
வாடி கூடிநின்று அழுகிறார்கள்
விரைவில் அவைகளும் உரமாகலாம்
மண்ணிற்கு

உள்ளத்தால்
ஊமைக் கனவுகளாய்
ஓர் அஞ்சலி அதற்கு செலுத்தி விடுவதை
தவிர வேறென்ன
செய்துவிட முடியும் என்னால்

இரவு மின்தடைக்கு மின்மினி பூச்சியாகும் ஒற்றை மெழுகுவர்த்தியை எடுத்து
வந்து உயிர்கொடுத்தேன்

கொழுந்து விட்டு
எரியாத சாந்த முகத்தோடு என்சோகத்தோடும் சருகுகளின் சோகத்தோடும்
அலைபாய்ந்து அங்குமிங்குமாக
ஆடி அசைந்து
ஒப்பாரி வைக்கும்
தீப வெளிச்சத்தை
அணையாமல் மிதமாக கட்டித்தழுவிய காற்றசைவும் கண்ணீரின் வலியறிந்திருக்கக்
கூடும்

நான்,
சருகுகள்,
மெழுகுவர்த்தி,
மேசை,
நாற்காலி,
ஜன்னல்,
காற்று,
ஒலி,ஒளி யென்று

அனைவரும்
செலுத்தினோம்
வீழ்ந்த ஆலமரத்திற்கு கண்ணீரஞ்சலியை

அப்போதுதான்
எல்லாம் அப்படியே
இருக்க இங்கெப்படி
ஏதோ மாற்றமென்று
வீதியுலா வந்த
நிலவின் புத்திக்கு எட்டியது

விரைந்து இறங்கினாள் வின்னழகு நிலவின்
மகள்

அவள் கவனத்தை
நாங்கள் ஈர்த்தோமா!
இல்லவே இல்லை
அவளுக்கும் உயிரோட்டமுண்டு உயிர்வலி உணர்ந்தவள்
அவள் ஆகவே அவளே
வந்திறங்கினாள்

மரணித்து கிடக்கும் ஆலமரம்
மௌனத்தோடு சேர்ந்திருக்கும்
நாங்கள்
திசைதிருப்பி
விழிகளை சிமிட்டாமல் நிலவின் மகள் பார்க்கிறாள்

பரிவுடன் காட்சிதனை ஜன்னலும்
எடுத்துரைக்க
அழைக்கிறாள்
மழையை
நிலவின் மகள்

பெருமழையிடமும் பேரிடியிடமும் ஆணையிடுகிறாள்
நிலவின் மகளானவள்

அதோ அவர்கள்
நம் உறவினர்கள் நம்மினத்து
ஆலமரத்திற்கு
அஞ்சலி செலுத்துகிறார்கள்

யாரோ இறந்து கிடந்தால் நமக்கென்ன என்று
இல்லாமல் யாராயிருந்தாலும் ஏற்றுகிறார்கள்
தீபத்தை

அணைக்காலும்
நீயும் அஞ்சலி
செலுத்து
அன்புள்ளம் இங்கே புதிதாய் துளிர்க்கட்டும்

ஆணைக்கேற்றவாரு கண்ணீரஞ்சலி
கடைசியில் தொட்டது விடியலை

எழுந்து சென்றேன் என்னை இரவில்
அழவைத்த
வீழ்ந்து கிடக்கும் ஆலமரத்தினடியில்

கண்டகாட்சி
கனவில்லை நிஜம்தான் புதுவிதை
முளைக்கத் தொடங்கியாயிற்று இப்பூமியில்

இனிநான் நிம்மதியாக தூங்கி இரவுகளை கடந்துவிடுவேன்,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...