02/05/2015

எனது ஈழம்

எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டுமெனில் நிகழ்காலத்தில் நமது முந்தைய
காலத்து நிகழ்வுகளை நினைவில் வைத்திருத்தல் அவசியமாகிறது. அப்படி
அவசியப்படும் நினைவுகளை எப்போதும் அசைபோடுவதில் மனதிற்கு சிற்சில
புத்துணர்வு ஏற்படுவதை நம்மால் உணர முடிகிறது. அப்படித்தான் ஈழத்து
உணர்வினை நானும் வளர்த்துக்கொண்டேன். இதில் பயணப்படுவதில் எச்சிரமும்
எனக்கு ஏற்பட்டதில்லை.நன்றாக நினைவிருக்கிறது பள்ளிப் பருவத்தில் உலக
நிகழ்வுகளை பற்றி ஏதும் தெரியாமல் சுற்றித் திரிந்த காலம் . மதிய
சத்துணவில் கோழி முட்டை இல்லையென்றாலோ,சத்துண­வு கூடத்தில் வழங்கப்படும்
சத்துணவுமாவு, புதுத்துணி(வெள்ளைசட்­டை காக்கி கால்சட்டை)காலுக்கு
செருப்பு இவைகள் வழங்கப்படாத நேரத்தில் மட்டுமே முதல்வரை குறைசொல்லும்
பருவம். வேறெதுவும் அப்பருவத்தில் தெரியவில்லை ,அந்த பள்ளி பருவத்தில்
ஒரு அந்தி மாலையில் பள்ளிக் கூட மணியடித்தவுடன் முந்திச் சென்று விடுதலை
பெற்றுவிட்டோமென்கிற நினைப்பில் வீட்டிற்கு புத்தகப்பை சுமந்து சாலையில்
நடந்து போகையில்தான் தென்பட்டது அந்த சிவப்புநிற சுற்றிக்கை ,கண்ணைக்
கவர்வதில் சிவப்புக்கு சிறப்பம்சம் அமைத்தவன் அடிமைச் சமூகத்து
மனிதனாகத்தானே இருப்பான். கவர்ந்திழுத்த சுற்றறிகையினை குணிந்து
எடுத்தேன். எலும்பும் தோலுமாக ஒரு உடம்பு மூக்குக் கண்ணாடியும் பற்களும்
மட்டுமே பெரியதாய் தெரிந்தது அவ்வுடம்பில் ,புத்தனின் ஒளிவட்டம் போலவே
அவ்வுடம்புக்குப் பின்னால் தாளை நிரப்பியிருந்தது சிவப்பு நிறம்.
அப்படியே சுற்றறிக்கையினை புத்தகப்பையில் சொருகி வீட்டிற்கு எடுத்துவந்து
படிக்கத் தொடங்கினேன். இலங்கை,ஈழம், தமிழ், என அனைத்தும் அப்போதுதான்
அறிமுகமானது. அதுவரையில் இலங்கையானது இந்திய வரைபடத்தில் மட்டுமே எனக்கு
அறிமுகம் . அதுவும் தமிழகத்து எச்சில் இலங்கை என அவ்வப்போது ஆசிரியர்கள்
குறிப்படுவார்கள். நினைவில் வைத்துக்கொள்ள ஆசான்கள் கையாண்ட கேவலமான
யுக்தி அதுவென்று வளர்ந்த பிறகு உணர்ந்தேன். இதுதான் ஈழநாடு, இங்கே
வாழ்பவர்கள் தமிழர்கள், ஈழத்தின் பல வருட போராட்டம்,
செல்வா,திலீபன்,பிரபா­கரன் போன்றோரின் அறிமுகமென அனைத்தும் தாங்கி
நின்றது அந்த சுற்றறிக்கை, அட்டை படத்தில் தோழர் திலீபன் தான்
இருந்திருப்பார் என்று முன்பே யூகித்திருப்பீர்கள்.­ முழுமையாய் படித்து
முடித்தபின் முடிவுரையினை எட்டியதில் மூளைக்குச் சென்றடைந்தது புரட்சி
வசனமொன்று "ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்" என்பதுதான் அவ்வசனம்.
பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்துவிட்டது அவ்வசனம். படிக்கும்
புத்தகங்களில் அவரவர்க்கு பிடித்தமான கீதை,பைபிள்,குரான்,க­ாதல்,
விவேகானந்தர், வசனங்களை சகமாணவர்கள் எழுதி வைத்திருக்கையில் எனது
புத்தகத்திற்கான அடையாளம் "ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்"
வசனமாகத்தான் இருந்தது அதோடு நின்றுவிட வில்லை புத்தக பக்கங்களின்
திரட்டியின் நடுவே மொத்தமாக மடித்து அதில் நமக்கு பிடித்தமானதை எழுதி
அதன் பின் இன்னொரு பக்கமாக மொத்த பக்கத்தையும் மடித்தால் எழுத்துக்கள்
மறையும் மாணவப் பருவ வித்தை விளையாட்டொன்று உள்ளதே, அதில் "விடுதலைப்
புலிகள்" என்றெழுதி வைத்திருப்பேன். அந்த அளவிற்கு ஈழத்தின் மீதான
பற்றுதலை பள்ளிப் பருவத்தில் ஊட்டிய ஒற்றை சுற்றறிக்கையின் சீக்கிரம்
மறக்க முடியுமா என்ன,, காந்திய அகிம்ஸை அழிந்துவிட்ட நிலையில்தான் ஆயுதம்
தேவைப்படுகிறதென்பதை அன்றே எனக்கு உணர்த்திய ஈழத்து சுற்றறிக்கையின்
சொந்தக்காரனுக்கு என்றும் கடமைபட்டிருக்கிறேன்.­ என்றேனும் ஒரு நாள் அந்த
வசனத்தின் வெற்றி நமக்கு எட்டிவிடும் என்கிற நம்பிக்கையில் இன்றும் எனது
எழுதுகோல் இடைவிடாமல் எழுதிவருகிறது "ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்"

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...