09/04/2015

வறுமைக்கு பிறந்தவர்கள் நாங்கள்

வறுமைக்கு
பிறந்தவர்கள்
நாங்கள்
விண்மீன்கள்
கீழிறங்கி
உலவுவதை
யாரும்
பார்த்திடவில்லை

ஆடைகளற்றும்
இருந்த ஆடைகளும்
ஒட்டாத உடம்பிலும் கொப்பளங்களாய் காட்சிதரும் அவ்விண்மீன்களை
எங்களால்
எப்படி விரட்டிவிட முடியும்

உழைத்தும் ஒட்டவில்லை வயிற்றில் உணவு

விரட்டியடிப்போம் வறுமையினை
எழும் முழக்கங்கள் எப்போதாவது
ஒலிக்கும்

தேர்தல் நேரமதுவென தேரடியில்
தலைசாய்த்து வாக்குறுதிகள் வழிந்தோடுகிறது
எங்களின் குருதியில் நனைந்த படியே

ஒழுகும் குடிசையில் குடிநீரை சேகரிப்பதா இல்லை கண்ணீரை
சேகரிப்பதாவென
வறுமைக்கு
பிறந்தவர்கள்
நாங்கள்
விவரமேதும்
அறியவில்லை

விழுந்தே கிடக்கிறோம் வறுமையின்
பிடியிலே
விரைவில் நற்செய்தி வருமென விழிகளை உயர்த்திப் பார்த்ததில்
அருகில் விடியலுக்கு பதிலாய்
குருதி குடிக்கும்
பணமுதலைகளே
கண்ணில் படுகிறதே

ஏதும் செய்துவிட
முடியா கையறு
நிலையில்
கண்ணீரோடும்
முதலைகளும்
வஞ்சக நரிகளும் குடித்ததுபோக
கொஞ்சம்
குருதியோடும் குடிசையில்
வாழ்கிறோம்
ஏனெனில் வறுமைக்கு
பிறந்தவர்கள்
நாங்கள்

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...