26/04/2015

அப்படி பார்க்காதே நரியே!

போராடத் துணிவின்றி
போர்வைக்குள்
சிறை
கொண்டிருக்கிறேன்
பிறந்த மண்ணின்
மீது பற்றில்லை
எனக்கு

என் சிந்தனைகளை
நாளும் தொலைத்துவிட்டு
நானுமிங்கே
நடுவீதிக்கு வந்துவிட்டேன்

என் நாட்களையும்
நரிதின்று
போட்டிருக்கிறது
எலும்புத் துண்டுகளாய்

எதுவும் மிச்சம்
வைக்காமல் தின்ற
நரிக்கு என்நன்றிகள்

எனை தின்றுப்
பெருத்ததில்
தவறேதும்
உங்களிடமில்லை

புரட்சி மறந்தேன்
பூமியை தொலைத்தேன்

உழைப்பை மறந்தேன்
உணவையும்
உடையையும்
உறங்குமிடத்தையும்
தொலைத்தேன்

உலகத்து அன்பை
மறந்தேன்
உறவுகளை
தொலைத்தேன்

உடல்முழுக்க
ஊறிப்போனதொரு
சாதியத்தை என்னால்
மறந்தும் இருந்துவிட
முடியவில்லை
மறுத்துப் பேசாத
பிந்தையகால
பிணந்தின்னியானேன்

பேசாமலே ஓடிப்போனதிங்கே
மனிதம்

போதும் அதனால்தான்
சொல்கிறேன்
நரியே
உங்களின் மீது
தவறில்லையென்று

நான் மனிதபிறவியா?
மிருக பிறவியா?
சந்தேகக் கண்விரித்து
அப்படி பார்க்காதே
நரியே
நிச்சயமாகச்
சொல்கிறேன்
நானும் உன்னினம்
தானென்று,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...