03/04/2015

காதலுக்குள் நுழைந்துவிடேன்

மனதினை இலகுவாக்கினேன்
அவளைக்
கண்டநாள் முதலாய்

என் மனத்தோட்டத்தில்
புதுவரவாகிப் போன
பூக்களுக்கினி
விருந்துதான்
பட்டாம்பூச்சிகள்
உடலெங்கும்
ஊஞ்சலாடுகிறது

இறுகிய மனம்
இளகிய மனமானதில்
மாலையிட
மாட்டாயோ

மயில்தோகை
விரிய
மழையினை
தூதிற்கு
அழைக்க மாட்டாயோ

காதல் மயக்கத்தில்
கண்டதையெல்லாம்
கனவினில்
உளறுகிறேனாம்

மழை வருமுன்னே
கார்மேகம்
திரள்வதுதானே
முறை

தெரியாதவர்க்கு
தெரியப்படுத்த
போயிருக்கும்
என்னிரவுக்
கனவினை
நீயும் நுகர்ந்துவிடேன்

நுழைவு வாசலை
திறந்தே வைத்திருக்கிறேன்
திகட்டாத
காதலுக்குள்
நீயும் நுழைந்துவிடேன்

மகரந்தம் சுமந்து
வரும் வண்டுகளை
சுமையாக
எண்ணினாயோ

மலர்கள் சுடுகிறதே
சுட்டாலும்
சுகமெனக்கு
மரங்களை விதைக்கும்
மகரந்தத்திலேதான்
என் காதலும்
கலந்திருப்பதை
என்றுதான்
அறிவாயோ

எத்தனைநாள்
நானும்
ஏமாற்றத்தை
ஏந்தியிருப்பேனோ

யுகங்கள்
கடந்து போனாலும்
காதலை தொலைக்கவில்லை
நானும்

தொலைதூரத்தில்
நீயிருந்தாலும்
தொடுதூரத்தில்
இருப்பதாகவே
இன்னமும்
எனதுள்ளம்
ஏகாந்தம் பேசுகிறது

என்றேனும் என்காதல்
உன் காலடிதேடி
வரும்

நீயுமென் காதலை
மிதிக்காமல்
மீட்டெடுப்பாயெனும்
நம்பிக்கையில்
நகரமுடியாமல்
நானும்
நகரவீதியில்
காத்திருக்கிறேன்

ஒருநாள்
இனிப்புச் செய்தியாக
சம்மதம் வருமென்று
சாரலில் பூத்த
புதுமலராய்
நானுமின்னும்
காத்திருக்கிறேன்

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...