04/03/2015

திண்ணி(ஈ)யம்

தன்னுடல் மெலிந்து
தாயத்து
வியர்வையாய்
உழைத்தோம்!
உணவுப் பஞ்சத்தில்
உடலொட்டிய
சிறு குடலுக்கு
உணவு கேட்டோம்!

தவறா? இது தவறா?

கூலிக்கு
கூழ் கேட்டால்
மனக்கசப்புடைய
மலக்கசாயத்தை
திணித்தீரே!

செல்வசெழிப்பினால்
உப்பிய வயிற்றிற்கு!
திண்ணியத்தால்
உப்பிய வயற்றின் வலியென்ன
தெரியவாப் போகிறது!

குளிர்பானத்தில் குழலிட்டு குடித்துவிட்டு!
மலபானத்தை
புனலிட்டு
புகுத்திய புன்னியவான்களே!

திண்ணியத்தால் திணறிய
எங்கள்
சுவாசத்திலென்ன
அவ்வளவு சுகமா இருக்கிறது!

கும்மியிட்டு! கும்மாளமிட்டு! அச்சுகத்தை அனுபவிக்கிறீர்களே!

நியாமா?
இது நியாமா?

மலச்சிக்கலுக்கு மருத்துவம்
தேடியதொரு கூட்டம்!
எங்கள் வாயினில் திணித்த மலக்கசாயத்தில்
ஆய்வு செய்கிறதே!

முடிந்ததா?
உங்களாய்வு
முடிந்ததா?

பிறகென்ன
இம்மண்ணில்
தாழ்த்தப்பட்டவன்
பிறந்தானே இவன்விதியென! திண்ணியத்து
திரவக
நாற்றத்தால்
மூக்கையும்
முகத்தையும்
மூடிச் செல்லுங்கள்!

எங்கேயும் எப்போதும் "இதுவும் கடந்துபோகுமெனும்" மந்திரச்சொல் உங்களுடனே
பயணிக்கும்!

மூதாதையர் மூத்திரப்பையில்
மூச்சுவிட மறந்தவர்கள்
இவர்களென!

வரலாற்றுச்
சுவடுகளில்
திண்ணியத்து ஆதரவினை வாசல்தோரும் தெளித்துவிட்டு!
தீட்டுப்பட்டவன் திண்ணியத்தை குடிப்பதுதானே சரியெனும்
விதியினை வீசி!

தீண்டத்தகாதவன்
திண்ணியத்து சொந்தக்காரனென
சொர்க்கபூமி வரை
வாதிட்டு செல்ல இன்னும்
வழியேதேனும் உள்ளனவா!
என வரைபடம் வகுக்குகிறீர்களோ!

வலிகளை
சுமந்துவரும்
வர்க்கத்து உறவுகளை ஒதுக்கிய
சமூகமே கேளுங்கள்! எங்கள்
சாபத்து நியாயவொலி இதுவல்ல!

எங்கள் சாவுக்கு சவுக்கடிப் பறையை ஒலிக்கவிடுகின்றோம்!
செவி சாய்க்க மாட்டாயோ! திண்ணியத்தை துரத்திவிட
மாட்டாயோ!

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...