12/03/2015

விவசாய நிலம்

விவசாய நிலம்

நிராயுதமாய்
நிற்கிறேன்
எதிரி யாரென்றே
தெரியாத பொழுது

எனக்கெப்படி
எதிர்நீச்சலடிக்க
தெரியும்

அதோ வருகிறார்கள்
அளவை ஆயுதமேந்தி
ஆளும் அரசும்
அதன் கூடவே கைகோர்த்து
நிற்கும்
ஆகாயத்தை
விழுங்கியும்
விடியாத
முகங்கொண்ட
முதலாளிகளும்

கூட்டறிக்கை
விடுகிறார்கள்
கூடவே அதற்கு
சட்டமென
பெயரிடுகிறார்கள்

என் சிறு கூடும்
அச்சிறு கூட்டிற்கு
உழைக்கும்
என்
குறுநிலத்தையும்
கூறு போட்டு
விற்கவே அவர்கள்
கூட்டணி
அமைத்தார்களோ!

ஐயோ!!!
மாடாய் உழைத்தாலும்
பசி தீரவில்லை
என் பாழ்
வயிற்றுக்கு
தோலொட்டி
நிற்கிறேன்
தோள்கொடுக்க
நாதியில்லை

இந்த நிலம்
எனக்களித்த
விதைகளை
நான் பெற்று
உழைப்பெனும்
கருவினை
நாளும் சுமந்து
உணவு
படைக்கிறேன்
இம்மண்ணின்
உயிர்களுக்கு

என் வயிறு
பட்டினி
கிடந்தாலும்
பாசமிகு
விவசாயத்தை
விடாமல்
உடனழைத்து
விதியினை
பழிக்காமல்
விடியலை
நோக்குகின்றேன்
பல அட்சய
பாத்திரங்களை
நானுமிங்கே
நிரப்புகின்றேன்

நீதி மடிந்தொழிந்து
நிதியில்
அவை குளித்து
என்
நிலத்தை
பறிக்க வருகிறதே

நிறுத்த
ஆளில்லையா
உணவு
கொடுத்த
விவசாயி
நானோ
கல்லறையின்
பிடியில்
கசங்கிய
உடலோடு
நிற்கிறேன்

என் உழைப்புக்கு
நீங்கள்
உதவத்
தேவையில்லை
உணவு இனியில்லை
உங்களுக்கென
உணர்ந்தால்
போதும்

ஊமையாகி
கிடந்தது
போதும்
என் சமூகமமே
உறக்கத்தை
கலைத்தெழுந்து
உதவாது
நிலம் கையகச்
சட்டமென
உரக்கச்
சொல்லிடுங்களேன்

பறிக்க வருகிறார்கள்
அவர்கள்
பதுங்குவது
நியாயம் தானா
என் நிலத்தை
காத்திட வேண்டும்
விவசாயம்
வளர வேண்டும்

இந்த ஏழை
விவசாயி
கையெடுத்து
கும்மிடுகிறேன்
களப்பை பிடித்த
கையிது
ஒருதுளி கூட
களங்கமில்லை

உணவுண்ணும்
உங்களின்
கைகளை
எனக்காக
உயர்த்திப் பிடியுங்களேன்
ஊரை விட்டு
துரத்துங்களேன்
இந்த
உதவாத
நிலம் கையகச்
சட்டத்தினை,,,

எதிர்வினைகள்:

0 கருத்துகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...